இந்த பிரபஞ்சம் அதன் பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளால் நம்மை என்றுமே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய விண்வெளி நிகழ்வுகளில் மிகவும் சுவாரசியமானது சூரியப்புயல். சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் இந்த சக்தி வாய்ந்த அலைகள், பூமியின் தொழில்நுட்ப கட்டமைப்பில் சில இடையூறுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, Northern Lights எனப்படும் வண்ணமயமான காட்சிகளால் நம்மை மயக்குகிறது. இப்பதிவில் சூரியப்புயல் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
சூரியப்புயல் என்றால் என்ன?
புவி காந்தப்புயல் என்றும் அழைக்கப்படும் சூரியப்புயல், சூரியன் வெடித்து மிகப்பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடும்போது ஏற்படும் ஒரு சூரிய அலையாகும். இந்த வெடிப்புகள் சூரியனின் காந்தப் புலத்தில் இடையூறுகளை உருவாக்குவதன் விளைவாக, சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சுகள் விண்வெளியில் வெளியேற்றப்படுகின்றன.
எப்படி உருவாகிறது?: சூரியப் புயல்கள், சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளில் இருந்து உருவாகின்றன. இந்த பகுதிகள் தீவிர காந்த செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. சூரியப் புள்ளியில் உள்ள காந்தப்புல கோடுகள் முறுக்கப்படும்போது, வெடிப்பு ஏற்பட்டு ஆற்றலை வெளியிடும். இந்த வெடிப்புகளால் கதிர்வீச்சுகள் விண்வெளி முழுவதும் சிதறுகின்றன.
இதில் கரோனல் மாஸ் எஜெக்ஷன் என்பது சூரியப் புயல்களின் மற்றொரு முக்கிய அங்கமாகும். சூரியன் பில்லியன் கணக்கான டன் காந்த பிளாஸ்மாவை விண்வெளியில் வெளியேற்றும்போது, சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அதிக வேகத்தில் விண்வெளியில் பயணிக்கின்றன. இவை பூமியின் அருகே வருவதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம்.
பூமியின் மீதான தாக்கம்: ஒரு சூரியப் புயல் பூமியை அடையும்போது, அது நமது கிரகத்தின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்கிறது. இது சில தொந்தரவுகளை உருவாக்கி, செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சீர்குலைக்கலாம், பவர் க்ரிட்களை பாதிக்கலாம் அல்லது ரேடியோ அலைவரிசையை தடுக்கலாம். மேலும் சூரியப் புயலின் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொண்டு Northern Lights நிகழ்வுகளை உருவாக்குகின்றன.
பூமிக்கு சூரியப் புயலால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், சூரியனின் ஆற்றலை நாம் தெரிந்து கொள்வதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். விஞ்ஞானிகள் சூரியப் புயல்களை தொடர்ந்து ஆய்வு செய்து எதிர்காலத்தில் அதன் தாக்கங்களை கணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இந்த பிரபஞ்சத்தை மேலும் வியப்புடனேயே நம்மை பார்க்க வைக்கிறது.