இப்போது வாகனச் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் துரையை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீப காலமாகவே வழக்கமான எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். இவற்றில் குறிப்பாக பைக் மற்றும் கார்கள் அதிக மாற்றங்களுடன் வெளிவருகிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போதுதான் புதிதாக வருகிறது என்பதால், அதை பராமரிப்பது சார்ந்த தெளிவு மக்கள் மத்தியில் இருப்பதில்லை. என்னதான் பெட்ரோல் டீசல் வாகனங்கள் போல இதில் அதிக பராமரிப்பு தேவைப்படாது என்றாலும், மின்சார வாகனங்களுக்கும் சில பராமரிப்புகளை நாம் செய்ய வேண்டியது அவசியம். எனவே இந்த பதிவில் மின்சார கார்களை எப்படி பராமரிக்கலாம் எனப் பார்க்கலாம்.
மின்சார கார்களில் மிக முக்கிய பாகங்களாக இயங்குவது மோட்டார் மற்றும் பேட்டரிதான். எனவே அவற்றை அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும். அதன்பிறகு பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டியரிங், சஸ்பென்ஷன் போன்ற மற்ற பாகங்களையும் கவனிக்க வேண்டும். எலக்ட்ரானிக் கார்களில் உள்ள பேட்டரிகள் அதிக ஆயுள் கொண்டவை என்பதால் அவை நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
இருப்பினும் அவற்றை நம் இஷ்டத்திற்கு கவனிக்காமல் விடுவது தவறு. காரின் பேட்டரியை எப்போதும் முழுமையாக சார்ஜ் தீரும் வரை பயன்படுத்தக்கூடாது. அதேசமயம் அதிக வெப்ப நிலையில் பேட்டரியை சார்ஜ் செய்யக்கூடாது. மேலும் நீண்ட நேரம் காரை ஓட்டிய பிறகு உடனே பேட்டரியை சார்ஜ் செய்தால் அது வெப்பமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாகவே எலக்ட்ரிக் கார்களில் ரீஜனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என்ற அம்சம் இருக்கும். இது என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும் போதும் தானாகவே பேட்டரி சார்ஜ் ஆகும் தொழில்நுட்பமாகும். இதனாலையே காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிக்க முடிகிறது. எனவே பேட்டரியோடு சேர்த்து பிரேக்கிங் சிஸ்டத்தையும் பராமரிப்பது தேவைப்படுகிறது.
பெட்ரோல் டீசல் கார்களைப் போலவே எலக்ட்ரானிக் கார்களிலும் டயரில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக காரின் டயர்களில் சரியான அளவு அழுத்தம் இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவ்வப்போது டயர்களில் காற்றை நிரப்புங்கள். தேவையை விட காற்று குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அதனால் ஆபத்துக்கள் அதிகம். டயரில் காற்று கம்மியாக இருக்கும்போது அது அதிக மின்சாரத்தை உறிஞ்சும். மேலும் குறைந்த காற்றால் டயர்கள் வேகமாக தேய்ந்துபோகும் அபாயமும் உண்டு.
மின்சாரக் கார்களை நீண்ட காலத்திற்கு நீங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வைத்திருப்பது மூலமாகவே, சராசரி பெட்ரோல் டீசல் கார்களை விட உங்களுக்கு அதிக சேமிப்பைக் கொடுக்கும். ஏனெனில் பெட்ரோல் டீசல் காரின் விலையை விட மின்சாரக் கார்களின் விலை பன்மடங்கு அதிகம். இதில் அதிகமாக நகரும் பக்கம் பாகங்கள் இல்லை என்றாலும், முக்கியமாய் கவனிக்க வேண்டிய பேட்டரி, ஸ்டியரிங், டயர்கள், பிரேக்கிங் போன்றவற்றை சரியாக பராமரித்து வந்தால், நீண்ட காலத்திற்கு அதன் பலனை நாம் அனுபவிக்க முடியும்.