உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என எப்படித் தெரிந்துகொள்வது?
இன்றைய ஸ்மார்ட்போன்கள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய வங்கி விவரங்கள், சோஷியல் மீடியா கணக்குகள், அலுவலக மின்னஞ்சல்கள், தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் என அனைத்தையும் அதனுள் வைத்துள்ளன. அதனால்தான் சைபர் குற்றவாளிகள் இப்போது ஸ்மார்ட்போன்களை அதிகம் குறிவைக்கிறார்கள்.
உங்கள் மொபைலை ஹேக் செய்வதன் மூலம், உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை உங்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்த முடியும். இது பெரும்பாலும் மால்வேர், ஸ்பைவேர் அல்லது பிஷிங் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் நிகழ்கிறது. சைபர் குற்றவாளிகள் பணம் திருட, உங்கள் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்த, உங்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க அல்லது ரகசிய கோப்புகளை அணுக இதைச் செய்கிறார்கள். இது உங்களுக்குத் தெரியாமலே வாரக்கணக்கில் அமைதியாக நடக்கலாம்.
எவ்வாறு ஹேக் செய்யப்படுகிறது?
பாதுகாப்பற்ற ஆப்ஸ்களை டவுன்லோட் செய்வது அல்லது பாதுகாப்பற்ற வலைத்தளங்களுக்குச் செல்வது மூலம் ஹேக்கர்கள் உங்கள் மொபைலில் நுழையலாம். Courier அப்டேட்ஸ், வங்கி எச்சரிக்கைகள் அல்லது OTP கோரிக்கைகள் போல வரும் பிஷிங் (Phishing) மெசேஜ்கள் மூலம் மொபைலை ஹேக் செய்யலாம். சில சமயங்களில் Public wifi-யைப் பயன்படுத்தும்போதும் உங்கள் தரவுகள் ஆபத்தில் முடியும்.
மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் மொபைலில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
திடீர் பேட்டரி ட்ரெயின் (Battery Drain)
அதிகப் பயன்பாடு இல்லாமல் போன் சூடாகுதல்
தரவுப் பயன்பாடு (Data Usage) அசாதாரணமாக அதிகரிப்பது
நீங்கள் இன்ஸ்டால் செய்யாத ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருப்பது
மொபைலின் வேகம் குறைவது
உங்கள் எண்ணில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு விசித்திரமான மெசேஜ்கள் செல்வது
இந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
இந்த அறிகுறிகளைக் கவனித்தால், உடனடியாக உங்கள் மொபைலின் இணைய இணைப்பைத் துண்டிக்கவும்.
நீங்கள் இன்ஸ்டால் செய்யாத ஆப்ஸ்களை நீக்கவும்.
உங்கள் மின்னஞ்சல், பேங்கிங் ஆப்ஸ்கள் மற்றும் சோஷியல் மீடியா கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகளை மாற்றவும்.
உங்கள் மொபைல் சேவை வழங்குநரை அழைத்து, நீங்கள் அங்கீகரிக்காத SIM செயல்பாடுகள் குறித்து விசாரிக்கலாம்.
McAfee அல்லது பிற நம்பகமான மொபைல் பாதுகாப்பு செயலியை நிறுவலாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ Google Play Store அல்லது Apple App Store இலிருந்து மட்டுமே ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான லிங்க்களை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
வலுவான ஸ்கிரீன் லாக் பயன்படுத்த வேண்டும்.
மொபைலில் Two-factor authentication இயக்க வேண்டும். Public WiFi பயன்படுத்தும்போது VPN பயன்படுத்த வேண்டும்.