2040க்குள் நிலவில் மனிதர்கள்! நாசாவின் புதிய திட்டம்!

Humans on the Moon
Humans on the Moon

2040 க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான வீடுகளைக் கட்ட நாசா திட்டமிட்டுள்ளது.

சமீப காலமாகவே நிலவின் ரகசியங்களை அறிவதற்கு பல நாடுகள் ஆராய்ச்சிகளை தீவிரமாக செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி இஸ்ரோ வெற்றி கண்டது. இப்படி நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாசா ஒரு படி முன்னே சென்று விண்வெளி வீரர்கள் நிலவில் சென்று தங்குவதற்குத் தேவையான வீடுகளைக் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. 

இதற்காக அடுத்த ஆண்டு நிலவில் வீடுகளை கட்டுவதற்குத் தேவையான 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தை நிலவுக்கு அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்தியா போலவே பல நாடுகள் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அங்கே மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்த சூழல் உள்ளதா? என்ற ஆய்வுகள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய முன்னேற்றங்களால் விண்வெளி வீரர்களால் சந்திரனுக்கு செல்ல முடியும், ஆனால், அவர்களால் நீண்ட நேரம் அங்கேயே தங்கி ஆய்வுகளை செய்ய முடியாது. அதற்கான தேவையான ஏற்பாடுகள் இதுவரை எதுவும் அங்கு செய்யப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, முதல் முறையாக நாசா 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான வீடுகளைக் கட்ட திட்டம் வகுத்து வருகிறது. இதை நியூயார்க் டைம்ஸ் தனது கட்டுரை ஒன்றில் விவரித்துள்ளது. 

நிலவில் விண்வெளி வீரர்கள் தங்கும்படியான வீடுகளை 3D பிரிண்டர் உதவியுடன் கட்டித் தர நாசா திட்டமிட்டுள்ளது. நிலவில் உள்ள பாறை துகள்கள் மற்றும் தாது பொருட்களைப் பயன்படுத்தி வீடுகளை கட்டுவதனால் விண்வெளி வீரர்களால் நிலவில் அதிக நாட்கள் தங்கி ஆய்வு செய்ய முடியும் என நம்பப்படுகிறது. இதற்காக நாசா பல தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நவீன தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இதற்காக ப்ளூ அர்ஜின் நிறுவனத்திற்கு இரும்பு, சிலிக்கான், ஆக்ஸிஜன், சோலார் செல்கள், கம்பிகள் மற்றும் அலுமினியம் போன்றவற்றை தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல நிலவின் மேற்பரப்பில் உள்ள தளர்வான மண்ணைப் பயன்படுத்தி திடமான மேற்பரப்பை உருவாக்குவதற்கான இயந்திரங்களை உருவாக்கும் பொறுப்பு ரெட் ஒயர் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இப்படி மனிதர்களை அங்கே தங்க வைப்பதற்கான எல்லா பணிகளும் நாசாவால் மும்முறமாக செய்யப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com