
இந்தியாவின் பாதுகாப்பு ஆயுதங்கள் பலவற்றிற்கு புராண கால ஆயுதங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. புராணத்தில் வருவதைப் போன்றே இந்த ஆயுதங்கள் வலிமையானவை. அஸ்ட்ரா எம்கே-III ஏவுகணையின் புதிய மற்றும் மேம்பட்ட பதிப்பிற்கு 'காண்டீவா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியப் புராணமான மகாபாரதத்தில் வரும் அர்ஜூனனின் புகழ்பெற்ற காண்டீவ வில்லைப் போலவே துல்லியம், சக்தி மற்றும் தகவமைப்புத் திறன் ஆகிய குணங்களை இந்த ஏவுகணை கொண்டதால், அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அஸ்திரா எம்கே-I ஏவுகணை 110 கிமீ வரை சென்று போர் விமானங்களை தாக்கும் திறன் கொண்டது. அஸ்திரா எம்கே-II ஏவுகணையின் அதிகரிக்கப்பட்ட தூரம், 160 கிமீ வரை சென்று போர் விமானத்தை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. தற்போதைய அஸ்திரா எம்கே-III (காண்டீவா) ஏவுகணை 300 முதல் 350 கிமீ தொலைவில் உள்ள எதிரி நாட்டு போர் விமானங்களை அழிக்க வல்லது. இந்த ஏவுகணை இந்தியாவின் டிஆர்டிஓவால் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில், ஒடிசாவின் பாலசோரில் தரையிலிருந்து காண்டிவா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
தற்போது இதன் அடுத்த கட்டமாக வானிலிருந்து ஏவுகணையை சோதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி காண்டீவ ஏவுகணை சுகோய் Su-30MKI போர் விமானத்திலிருந்து ஏவி, இலக்கை தாக்கி அழிக்க சோதனை செய்ய உள்ளனர். தற்போது காண்டீவா ஏவுகணையை போர் விமானத்தில் பொருத்துவதற்காக மின்னணு சோதனைகள் செய்யப்படுகின்றது. இதில் பயன்படுத்தப்பட்ட ராம்ஜெட் இயந்திரம் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு அதிக வேகத்திலும் நீண்ட தூரத்திலும் பறக்க உதவுகிறது.
ராம்ஜெட் இயந்திரம் இரட்டை எரிபொருள் குழாய் மூலம் உந்தப்பட்டு பல்வேறு உயரங்களில் இருந்து ஏவப்பட பயன்படுகிறது. இதன் அதிகபட்சமாக வேகம் 4.5 மாக் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு வேகமாக பறக்க கூடியது. காண்டீப ஏவுகணை 20 கிலோமீட்டர் உயரத்தில் 340 கிலோமீட்டர் வரையிலான இலக்கையும், 8 கிலோமீட்டர் உயரத்தில் 190 கிலோமீட்டர் வரையிலான இலக்கையும் தாக்கி அழிக்கும்.
இந்த ஏவுகணை எதிரியின் ஸ்டெல்த் பைட்டர்கள் , குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அவாக்ஸ் வான்வழி எச்சரிக்கை அமைப்புகள் போன்ற இலக்குகளையும் தாக்கும். இதில் உள்ள சென்சார்கள் எதிரி நாட்டு விமானம் பறக்கும் திசைக்கு ஏற்ப தனது திசையினை மாற்றிக் கொண்டு அதை துரத்தி சென்று அழிக்கக் கூடியது. இந்த ஏவுகணை சுகோய் Su-30 MKI, ரபேல், தேஜாஸ் போன்ற போர் விமானங்களில் பயன்படுத்தப்படும்.
காண்டிவா ஏவுகணை எதிரி நாடுகளின் ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்தது. சீனாவின் PL-15 மற்றும் பாகிஸ்தானின் AIM-120 ஏவுகணைகளை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிரிநாட்டு வான் இலக்குகளை திறனுடன் இந்திய விமானப் படை தாக்க முடியும். தொடர் சோதனையில் உள்ள காண்டீவா ஏவுகணை 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.