வாக்குரிமை ஒரு ஜனநாயக தேசத்தின் முக்கியமான செயல்பாடாகும். இந்த வாக்களிக்கும் முறையானது வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் நடத்தப்பட வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தி வருகிறது. இது பற்றி விரிவான விளக்கங்களை இந்த பதிவில் காண்போம்.
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்றால் என்ன?
கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய காகித ஓட்டுப் போடும் முறைக்கு மாற்றாக, EVM (Electronic Voting Machine) எனப்படும் இந்த இயந்திரங்கள் இந்தியாவில் வாக்குப்பதிவு நடத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் கச்சிதமாகவும் சிறிதாகவும் இருப்பதால், தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்வது எளிதாகிறது. வாக்குகளை வேகமாக பதிவிடவும் இந்த சாதனம் வழி வகுக்கிறது.
EVM இயந்திரங்களை யார் உருவாக்கியது?
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1980 களில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
இந்த இயந்திரம் எப்போது எங்கே முதலில் பயன்படுத்தப்பட்டது?
முதல் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1982 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் தேசிய தேர்தல்களிலும் அவை தற்போது பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. அவை நாடு முழுவதும் உள்ள 930,000 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எந்திரங்கள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? (Why)
இந்த இயந்திரங்களின் அறிமுகம் தேர்தல் செய்முறையை மிக துரிதமாகவும், வெளிப்படையாகவும், திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கான ஒர் அடுத்த கட்டம் நடவடிக்கையாகும். பாரம்பரிய காகித வாக்குச்சீட்டு முறையில் பல பிழைகளும், தில்லு முல்லு வேலைகளும், பல முறைகேடுகளும் நடந்ததால், அதை தடுப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உருவாக்கப் பட்டன. இதனால் வாக்குப்பதிவு முறை நியாயமாகவும் வெளிப்படை தன்மையுடனும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்த இயந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன?
இந்திய வாக்கு இயந்திரங்கள் செயல்பட எவ்விதமான வெளிப்புற சாதனங்களோ கனெக்ஷன்களோ தேவையில்லை. பேலோட்டிங் யூனிட் மற்றும் கண்ட்ரோல் யூனிட் என்று இரண்டு பிரிவுகள் இதில் இருக்கும். பேலோட்டிங் யூனிட்டில் தான் வாக்காளர்கள் தனது வாக்கை செலுத்துவார்கள். கண்ட்ரோல் யூனிட் என்பது, செலுத்திய வாக்கினை சேமிப்பதற்கு பயன்படுகிறது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பாகவும் எளிமையானதாகவும் இருப்பதால், வாக்காளர்கள் தான் விரும்பும் கட்சிக்கு எந்த இடையூறும் இல்லாமல் வாக்கினை செலுத்தலாம்.
தற்போது வரை இந்த இயந்திரங்கள் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வாக்களிக்கும் செயல்முறை மிகவும் வேகமாகவும், அதேசமயம் வாக்குகளை எண்ணுவதற்கான நேரத்தையும் இது குறைத்துள்ளது. இதனால் முடிவுகளை நாம் விரைவாக அறிய முடியும். இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்தாலும், இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற பிரச்னைகளை தீர்க்க பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.