என்னது? அரிசி பாத்திரத்தில் உணரிகளா? (Sensors) IoT தொழில்நுட்பம் - அதிசயத்திலும் அதிசயம்!

Internet of Things (IoT)
Internet of Things (IoT)

"brb" என்றால் என்ன என்று தெரியுமா?

தெரியாது என்றால், நீங்கள் மிகவும் இளைஞர் என்று பொருள், இணையத்தின் தொடக்கக் காலம் உங்களுக்கு அறிமுகமில்லை என்று பொருள்.

அன்றைய இணையம் கணினிகளில்மட்டும்தான் கிடைத்தது. அந்தக் கணினிகள் மிகப் பெரிய அளவில் இருந்தன. அவற்றை ஒரு மேசைமீது வைக்கவேண்டும், தொலைபேசிக் கம்பிகளுடன் இணைக்கவேண்டும். அதன்பிறகு, ஒரு சிறப்பு மென்பொருளைத் திறந்து அதன்மூலம் இணையத்துடன் இணைக்கவேண்டும். இவ்வளவையும் செய்தபின்னர்தான் உங்களுக்கு மின்னஞ்சலோ மின் அரட்டையோ இணையத் தளங்களோ கிடைக்கும்.

அப்படி மேசைக் கணினிகளில் இணையம் வழியாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பவர்களுக்குத் திடீரென்று தாகம் எடுத்தால், அல்லது, கழிப்பறைக்குச் செல்லவேண்டியிருந்தால், "brb", அதாவது, "be right back" என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். அதாவது, brb என்றால் "இதோ திரும்ப வருகிறேன்" என்று பொருள்.

அன்றைக்கு brb என்ற சுருக்க அறிவிப்பு தேவைப்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கு எந்தப் பொருளும் இல்லை. ஏனெனில், முன்புபோல் இணையமானது மேசைமீதுள்ள கணினியில்மட்டும் இருப்பதில்லை. அதனால், "இதோ வந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு நாம் எங்கும் செல்லமுடியாது. ஏனெனில், இணையம் எங்கும் கிடைக்கிறது, எதிலும் கிடைக்கிறது.

எடுத்துக்காட்டாக, நம் வீட்டில் இருக்கும் அறிவார்ந்த தொலைக்காட்சிகள் (Smart Televisions) நேரடியாக இணையத்தில் இணைந்து நமக்கு வேண்டிய நிகழ்ச்சிகளைத் தரவிறக்கிக் காண்பிக்கவல்லவை. நம் கையில் அணியக்கூடிய Health Band எனப்படும் உடல்நலப் பட்டைகள் நம்மைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து முதன்மையான தகவல்களை இணையத்துக்கு அனுப்பவல்லவை. இப்படிப் பெரிய, சிறிய, மிகச் சிறிய பொருட்களெல்லாம் இணையத்துடன் இணைகின்ற வசதி வந்துவிட்டதால், இன்றைய உலகம் IoT எனப்படும் Internet of Things (பொருட்களின் இணையம்) தொழில்நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

இதனால், இப்போதெல்லாம் பொருட்கள் தயாரிக்கப்படும்போதே இவற்றை இணையத்துடன் இணைத்தால் எப்படி இருக்கும், அதன் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்று வல்லுநர்கள் சிந்திக்கிறார்கள். இதனால், IoT நம் வாழ்க்கை முறையைப் பெரிய அளவில் தீர்மானிக்கப்போகிறது.

எடுத்துக்காட்டாக, ஓர் அரிசிப் பாத்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இன்றைக்கு அது அரிசியைப் பாதுகாப்பாக வைப்பதற்குமட்டும்தான் பயன்படும். ஆனால், அதில் சில உணரிகளை (Sensors) வைத்து அவற்றை இணையத்துடன் இணைக்க இயலுமானால், அதன் பயன்பாடு மேலும் கூடலாம்:

  • அரிசியின் அளவு குறையும்போது அதை நமக்குத் தெரிவித்து, 'உடனடியா அரிசி வாங்குங்க' என்று நினைவூட்டலாம், அல்லது, தானே மளிகைக் கடையைத் தொடர்பு கொண்டு அரிசி வாங்கிவிடலாம்

  • ஒருவேளை அரிசி கெட்டுப்போய்விட்டது, அல்லது, அதில் வண்டு வந்துவிட்டது என்றால், அதைச் சுட்டிக்காட்டி உதவலாம்

  • புதிய அரிசியைப் பாத்திரத்தில் கொட்டும்போது அதில் கலப்படம் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்

  • யாராவது அவசரத்தில் அரிசிப் பாத்திரத்தைச் சரியாக மூடாமல் விட்டுவிட்டால் சத்தம் போட்டு ஊரைக் கூட்டலாம்

இப்படி வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் என்று நாம் பயன்படுத்துகிற அன்றாடப் பொருட்கள் அனைத்துக்கும் IoT புதிய பயன்பாடுகளை உண்டாக்கி அவற்றின் மதிப்பைக் கூட்டிவிடுகிறது. இன்றைக்கு எலக்ட்ரானிக் சில்லுகளின் விலை குறைந்துவிட்டதாலும், எல்லா இடங்களிலும் கம்பியில்லா இணையம் குறைந்த செலவில் கிடைப்பதாலும் நிறுவனங்களிடையிலும் மக்களிடையிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

IoT கருவிகளின் இன்னொரு நன்மை, இவற்றால் குறைந்த நேரத்தில் ஏராளமான தரவுகளைத் திரட்டமுடியும். இந்தத் தரவுகளை ஆராய்வதன்மூலம் நாம் புதிய வெளிச்சங்களைப் பெறலாம், இன்னும் நல்ல வாழ்க்கைமுறைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

அதே நேரம், இந்தக் கருவிகள் அனைத்தையும் இயக்குவதற்குத் தேவையான மின்சாரம், மின்கலன்களுக்கு (பேட்டரி) வழிசெய்தல், இவை தூக்கி எறியப்படும்போது உண்டாகும் மின் குப்பை, இவற்றின்மூலம் திரட்டப்படும் தகவல்கள் சரியாகப் பயன்படுத்தப்படுதல் என்று இதில் பல சவால்களும் இருக்கின்றன. சரியான கட்டுப்பாடுகள், வழிநடத்தல்களின்மூலம் IoTஐப் பயன்படுத்திக்கொண்டால் அது நமக்கு நல்ல தோழராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com