80 வினாடிகளில் துணிகளைத் துவைக்கும் நீரற்ற வாஷிங் மெஷின் கண்டுபிடிப்பு.

80 வினாடிகளில் துணிகளைத் துவைக்கும் நீரற்ற வாஷிங் மெஷின் கண்டுபிடிப்பு.

வீன சலவை இயந்திரங்களில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தாலும், ஒரு டீஸ்பூன் அழுக்கை அகற்ற சுமார் 100 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றன. மேலும் அதிலிருந்து வெளிவரும் அழுக்கு தண்ணீர், டிடர்ஜென்ட் பவுடரிலிருந்து வெளிவரும் கெமிக்கல் போன்றவை நல்ல நீரில் கலந்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. 

இதைத் தடுக்கும் விதமாக, சண்டிகரைச் சேர்ந்த 80wash என்ற ஸ்டார்டப் நிறுவனம், புதிய வாஷிங் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த வாஷிங்மெஷினில் துணிகளைத் தவிர, உலோகம், PPV Kits போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம். அதுவும் குறைந்த அளவு நீரில், வெறும் 80 நொடிகளில் என்றால் நீங்கள் நம்புவீர்களா?. இந்த வாஷிங்மெஷினில் டிடர்ஜென்ட் பவுடரும் பயன்படுத்த வேண்டாம் என்பது கூடுதல் சிறப்பு. 

இந்த இயந்திரமானது ISP நீராவி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு காப்பரிமை பெறப் பட்டுள்ளது. மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போலவே செயல்படும் இந்த இயந்திரம், துணிகளில் உள்ள கிருமிகள், அழுக்குகள், கரைகள், வியர்வை நாற்றம் போன்றவற்றை நீராவியைக் கொண்டு சுத்தப்படுத்துகிறது. சுமார் 7 முதல் 8 கிலோ எடையுள்ள இந்த சலவை இயந்திரம், வெறும் 80 நொடிகளில், 5 உடைகளை, அரை கப் தண்ணீரில் எந்த டிடர்ஜென்டும் இல்லாமல் சுத்தம் செய்யும் என அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

உடையில் கடினமான கரைகள் இருப்பின், நான்கு முதல் ஐந்து சுழற்சிகள் இயந்திரத்தை மீண்டும் மீண்டும் இயக்குவது மூலமாக அகற்ற முடியும். மேலும் இந்த இயந்திரத்தை பெரிய அளவில் உருவாக்கினால், 50 துணிகளை வெறும் 5 முதல் 6 கிளாஸ் தண்ணீரில் விரைவாகத் துவைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

தற்போது சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் மொஹாலி ஆகிய மூன்று நகரங்களிலுள்ள தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், சலூன்கள் உட்பட ஏழு இடங்களில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கான யோசனை பஞ்சாபில் உள்ள சிட்காரா பல்கலைக்கழகத்தில் உதயமானது என சொல்லப்படுகிறது. இந்த இயந்திரத்திற்கான காப்புரிமை கடந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெறப்பட்டது. பின்னர் இதை உருவாக்கும் அதிகாரப்பூர்வ செயல்பாடுகள் தொடங்கி, விமானி களுக்காக 7 முதல் 8 கிலோ எடையுள்ள சலவை இயந்திரம் உருவாக்கப்பட்டது. 

இனிவரும் ஆண்டுகளில் இதை சர்வதேச காப்புரிமைக்காக விண்ணப்பிக்க உள்ளனர். இது மட்டும் முறையான மேம்படுத்தல்களை அடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, விரைவாக குறைந்த நீரிலேயே உடைகளை சலவை செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com