ஒருவரால் தொடர்ச்சியாக 7 நாட்கள் அழ முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஒருவரால் தொடர்ச்சியாக 7 நாட்கள் அழ முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது?
Published on

மீபத்தில் ஒரு நபர் தொடர்ந்து ஏழு நாட்கள் அழுததால் பார்வை பாதிப்பு ஏற்பட்டது குறித்த செய்தியை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுகுறித்து இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் சிலர் தொடர்ச்சியாக அழுவது சாத்தியம் என்றும், சிலர் இது வெறும் கட்டுக்கதை என்றும் கூறுகின்றனர். 

அழுகை என்பது மனித உணர்வுகளின் அடிப்படை வெளிப்பாடு. மகிழ்ச்சி, சோகம், கோபம் அல்லது அதிகப்படியான சிரிப்பு போன்றவற்றால் நமக்கு அழுகை ஏற்படலாம். ஆனால் ஒருவரால் ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து அழுவது என்பது உடல் ரீதியாக சாத்தியமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

இதன் உண்மைத் தன்மையை அறிய அழுகையின் பின்னால் உள்ள அறிவியலை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணீர் நம் கண்களைப் பாதுகாப்பது, எரிச்சலூட்டும் பொருட்களை வெளியேற்றுவது, நம் பார்வையை தெளிவுபடுத்துவது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது. மேலும் அழுகை ஒரு முக்கிய உணர்ச்சியின் வெளிப்பாடாகும். நமது உணர்வு செயலாக்கத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் அழுகை உதவுகிறது. 

ஒருவருக்கு உணர்ச்சி மிகும்போது நம் கண்களுக்கு மேலே அமைந்துள்ள 'லாக்ரிமல்' சுரப்பிகள் கண்ணீரை உருவாக்குகிறது. அல்லது உணர்வுகளால் அந்த சுரப்பி தூண்டப்பட்டு கண்ணீரை வெளியிடுகிறது. இருப்பினும் இந்த சுரப்பிகளுக்கு அவற்றுக்கென சில வரம்புகள் உள்ளது. இவை தொடர்ச்சியாக கண்ணீரை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 

எனவே ஒரு மனிதனுக்கு உணர்வு ஏற்பட்டால் கண்ணீர் வரும் என்றாலும், ஏழு நாட்களுக்கு இடைவிடாமல் அழுவதென்பது ஒரு கட்டுக்கதை. சில நபர்கள் தீவிரமான உணர்ச்சி சார்ந்த தருணங்களை அனுபவிக்கலாம், இது நீண்டகால அழுகைக்கு வழிவகுக்கும், ஆனால் உடலால் இந்த செயல்பாட்டை தொடர்ச்சியாக ஒரு வாரம் வரை செய்ய முடியாது. மேலும் அழுகை என்பது உணர்ச்சித் தூண்டுதலினால் இயல்பாக ஏற்படுவது, அந்த உணர்வு வெளிப்பட்டு தீர்ந்தவுடன் கண்ணீர் உற்பத்தி பெருவாரியாக குறைகிறது. எனவே ஒரு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக ஒருவரால் உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே இருக்க முடியாது. 

மேலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அழுவது ஆரோக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த யாரேனும் மன உளைச்சலில் இருந்தால் அவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் போன்றவர்களின் ஆதரவு தேவை என்பதை அறிந்து செயல்படுங்கள். பலவிதமான உணர்ச்சிகளைக் கொடுத்து வாழ்க்கை நம்மை அழவைக்கும்போது கண்ணீர் சிந்துவது பரவாயில்லை என்பதையும் அறிந்துகொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com