விண்வெளி என்றதும் நம் நினைவிற்கு வருவது அங்குள்ள பூஜ்ஜிய புவியீர்ப்பு விசையின் சூழலில் மிதப்பது போன்ற காட்சிதான். ஆனால், அதே சூழலில் நீண்ட நாள்கள் வாழ்வது என்பது எளிதான காரியம் இல்லை. ஏனெனில், பூஜ்ஜிய புவியீர்ப்புவிசை கொண்ட சூழ்நிலை, மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த சூழ்நிலையில் ஒருவர் நீண்ட நாட்கள் தங்கும்போது, அவரின் தசை வலிமை குறையும். அதுமட்டுமல்லாது, உடல் எடை குறைவது, பார்வைத்திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் ஏற்படலாம். அதோடு, அவரின் எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. மேலும், அவ்வாறு ஏற்பட்ட எலும்பு முறிவு குணமடைவதற்கு அல்லது இழந்த எலும்பின் அடர்த்தியை திரும்பப் பெறுவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது என்கின்றனர் அறிவியலாளார்கள். இத்தகைய சூழ்நிலையில் விண்வவெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் ஆரோக்கியமாக இருப்பது எவ்வாறு?
நல்ல சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. இதற்காக, விண்வெளி வீரர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், விண்வெளி நிலையத்தில் அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வரும் என்றும் கூறப்படுகிறது.
விண்வெளிவீரர்களுக்கு என்று பிரத்யேகமான உணவுகள் சிறப்பு உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளில் நீர் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கும்.
தேநீர், காபி, ஆரஞ்சு சாறு மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் இந்த முறையில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், அந்த உணவுகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்க முடியும். இவற்றை தண்ணீரில் சூடுபடுத்தியோ அல்லது குளிர்வித்தோ விண்வெளிவீரர்கள் எடுத்துக்கொள்வார்களாம். நட்ஸ், பிஸ்கெட்டுகள், பழங்கள் போன்ற உணவுகள் அப்படியே உண்ணக்கூடிய வகையில் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படுமாம்.
பூமியில் இருப்பது போல, விண்வெளி நிலையத்திலும் கழிப்பறை இருக்கிறதாம். அங்கு கழுவுகளைக் கையாள தண்ணீருக்குப் பதில் காற்று (வேக்யூம் கிளீனர் போன்று) பயன்படுத்தப்படுகிறதாம். இந்த கழுவுகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, விண்கலத்தில் ஏற்றப்பட்டு, அது பூமியில் வளிமண்டலத்தின் அருகே செல்லும்போது, விடுவிக்கப்படும். பின், வளிமண்டலத்திலுள்ள வெப்பம் இவற்றை முற்றிலுமாக எரித்துவிடுமாம்.
இதே போன்று, சிறுநீரும் காற்று உதவியுடன் உறிஞ்சப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, தூய குடிநீராக மாற்றப்படுகிறதாம்.
விண்வெளியில் குளிப்பது என்பது சாத்தியமற்றது. இதற்குப் பதில், திரவ சோப் கொண்ட ஈரமான துணியைப் பயன்படுத்தி உடலைத் துடைப்பார்களாம். தலைக்கு தண்ணீர் தேவைப்படாத ஷாம்பூ பயன்படுத்தப்படுகிறதாம்.
தூங்குவதற்கென பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட பெட்டிகள் அல்லது பைகளுடன் தங்கள் உடலை இணைத்துக் கொண்டு தூங்குகிறார்களாம். அதிக சத்தம் கேட்காமல் இருக்க கண் கவசங்கள் மற்றும் காது அடைப்பான்களை பயன்படுத்துகிறார்கள்.
இதற்காக, பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகளும், டிரெட் மில் மற்றும் சக்கரங்கள் இல்லாத ஒரு உடற்பயிற்சி சைக்கிளும் விண்வெளி நிலையத்தில் உள்ளதாம். விண்வெளிவீரர்கள் ஒரு நாளில் 2 முதல் இரண்டரை மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதற்காக நேரம் ஒதுக்குகிறார்களாம். மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில மாத்திரைகளும் அவர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறாதாம்.