
குளிப்பதற்கு சோம்பலாக இருக்கும்போது, நம்மை குளிப்பாட்டி விட யாராவது அல்லது ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அது சாத்தியமாகப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், சமீபத்தில் பிரபல ஜப்பான் நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற நிறுவனம், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டிருந்தது. இந்த மனித சலவை இயந்திரம் பற்றிய கருத்துக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
1970 இல் ஜப்பான் உலக கண்காட்சியில் 'மனித சலவை இயந்திரம்' ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 'அல்ட்ராசோனிக் பாத்' என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் சன்யோ எலெக்ட்ரிக் கோ என்ற (Sanyo Electric Co.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
அந்த சமயத்தில், உலக நாடுகளின் மத்தியில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சலவை இயந்திரம் வெறும் 15 நிமிடங்களில், அதற்குள் இருக்கும் மனிதரை மஜாஜ் செய்து, சுத்தப்படுத்தி, உலர்த்தவும் செய்தது. அச்சமயத்தில் இந்த மனித சலவை இயந்திரம் வணிக ரீதியாக முக்கியத்துவம் பெறவில்லை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு உயர் தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் மீண்டு வருகிறது.
சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான யசுவாகி அயோமா, அவருக்கு 10 வயதாக இருக்கும்போது, 'அல்ட்ராசோனிக் பாத்' சலவை இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு வாய்ப்பு கிடக்கும்போது அந்த இயந்திரத்தை மேம்படுத்த முடிவு செய்தாராம்.
அதனடிப்படையில், குளியல் மற்றும் சமையலறை கண்டுபிடிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனம், மனித சலவை இயந்திரத்தை தன் சொந்த பதிப்பில் உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டது. இந்தத் திட்டத்திற்கு 'உசோயாரோ' என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த இயந்திரம் நுண்குமிழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்றும், இதனுடன் பல்வேறு கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனிதரை சுத்தப்படுத்துவதோடு, அவரின் மனநிலை மேம்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுவதே இந்த மனித சலவை இயந்திரத்தின் நோக்கம் என்றும் அதனடிப்படையில் கூறப்படுகிறது.
இதிலுள்ள சென்சார்கள், புத்துணர்வான அனுபவத்தை ஏற்படுத்த, நமது உடலின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து அதற்கேட்ப (தண்ணீரின் வெப்பநிலை, தண்ணீரின் ஒலி, மஜாஜ் ) இயந்திரம் செயல்பட வழிவகுக்கிறது. இதன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, நாம் அமைதியாக அல்லது உற்சாகமாக உணர்கிறோமா என்பதை பகுப்பாய்வு செய்து அதற்கேட்ப செயல்பட உதவுகிறது. ஒரு மனிதரை சுத்தப்படுத்த இந்த இயந்திரம் சுமாராக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுமாம்.
'உசோயாரோ' மனித சலவை இயந்திரம் 2025 ஆம் ஆண்டு ஒசாகா எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று சயின்ஸ் கோ. நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களில், ஒவ்வொரு நாளும் 1,000 பார்வையாளர்களுக்கு இந்த இயந்திரத்தில் குளிக்கும் அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.