வியாழன் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான Ganymede-ல் உயிர் வாழ்வதற்கான மூலக்கூறுகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஜூனோ என்ற விண்வெளி திட்டத்தின் மூலம் அனுப்பப்பட்ட விண்கலம், 2021ல் வியாழன் கிரகத்தின் நிலவை சுமார் 1046 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அதன் தரைப்பகுதியை இன்ஃப்ரா ரெட் படங்களாகப் படம் பிடித்தது. தற்போது அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள் Ganymede-ல் உயிர் வாழத் தேவையான கரிம மற்றும் உப்பின் மூலக்கூறுகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் மேற்பரப்பைக் கொண்ட இந்த நிலவில், பனிக்கட்டிகளுக்கு அடியில் கடல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர். ஏற்கனவே இந்த நிலவு குறித்த தகவல்களை கலிலியோ மற்றும் ஹபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தது நாசா. அப்போதே அதில் உயிர் வாழத் தேவையான கரிம கலவைகள் இருக்கலாம் என எதிர்பார்த்தனர்.
தற்போது ஜூனோ விண்கலம் அளித்த தகவலின் அடிப்படையில் அதில் கரிம கலவைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் Ganymede-ல் அமோனியம் குளோரைடு, சோடியம் பை கார்பனேட், சோடியம் குளோரைடு மற்றும் அலிபட்டிக் அல்டிஹைட் உள்ளிட்ட கலவைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரை செயல்படும் இந்த ஜூனோ திட்டமானது, வியாழன் கோளை மட்டுமின்றி, வியாழன் கோளின் நிலவுகளையும் கடந்து சென்று அவை குறித்த தகவல்களை சேகரிக்கும் என நாசா கூறியுள்ளது. இதில் மேலும் பல மர்மங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.