கீபோர்டில் நாம் டைப் செய்யும்போது வரும் ஒலியிலிருந்தே தரவுகளைத் திருடும்படியான கற்றல் மாதிரியை, செயற்கை நுண்ணுறிவுக்கு விஞ்ஞானிகள் பயிற்றுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் எல்லா துறைகளிலுமே AI தொழில்நுட்பம் நுழைந்து வருகிறது. இதன் மனிதர்களை மிஞ்சும் ஆற்றல் அனைவரையுமே கவர்ந்து வந்தாலும், மறுபுறம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மிகவும் வித்தியாசமான முறையில் தரவுகளைத் திருடுவதற்காக AI தொழில்நுட்பத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் கற்றல் மாதிரியைப் பயிற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மக்கள் தன்னுடைய கீபோர்டில் தட்டச்சு செய்யும் முறையைக் கண்டறிய AI தொழ்நுட்பத்திற்கு புதிய மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் அது பிறர் தட்டச்சு செய்யும் சத்தத்தைப் பயன்படுத்தியே அவர்களின் தரவுகளை 95 சதவீதம் வரை துல்லியமாகக் கண்டுபிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மடிக்கணினி அல்லது கம்ப்யூட்டரில் இருக்கும் மைக்ரோபோனைப் பயன்படுத்தி, அதன் கீபோர்டில் ஒருவர் என்ன தட்டச்சு செய்கிறார் என்ற ஒளியை அடையாளம் காணும் வகையில் AI மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியை Skype மற்றும் Zoom போன்ற செயலிகளில் பயன்படுத்தியபோது, அவற்றின் துல்லிய விகிதம் 93 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதை தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம் என நாம் நினைத்தாலும், இதன் வாயிலாக ஹேக்கர்கள் பிறருடைய தரவுகளை எளிதாகத் திருட முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் ஒருவர் தன்னுடைய சாதனத்தில் வங்கிக்கணக்கு விவரங்களை உள்ளிடும்போது இந்த AI அல்காரிதம் அந்த சாதனத்தில் செயல்பாட்டில் இருந்தால், அவர் என்ன தட்டச்சு செய்கிறார் என்பதை ஹேக்கர்கள் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். எனவே இதை முறையாக செயல்படுத்த தெளிவான திட்டம் வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் மேக்புக், ஐபோனைப் பயன்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மேக்புக்கில் 36 Key-களை அழுத்தும்போது, அதில் 25 முறை துல்லியமாக ஒலியைப் பயன்படுத்தி அதன் தரவைப் படிக்க AI தொழில்நுட்பம் உதவியது. மேலும் மேக்புக்கில இருந்து 17 சென்டிமீட்டர் தொலைவில் வைத்து கீபோர்டை இயக்கியபோதும் இது நன்றாக செயல்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.