ஹைட்ரஜன் முதல் யுரேனியம் வரை இயற்கையில் தொண்ணுற்றி இரண்டு தனிமங்கள் (92 Natural Elements) உள்ளன. இவற்றில் மிகவும் இலேசான தனிமம் ஹைட்ரஜன். மிகவும் கனமான தனிமம் யுரேனியம். இதன் காரணமாகவே யுரேனியமானது அணுஉலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
அணுஉலையில் யுரேனியம் 235 (U235), யுரேனியம் 233 (U233) எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. யுரேனியம் கனமான தனிமமாகும். கனமான அணுக்களை நியூட்ரான்களைக் கொண்டு வினைக்கு உட்படுத்தப்படும் போது அவை சிறு அணுக்களாக பிளவுபடுகின்றன. இந்த நிகழ்ச்சியை அணுப்பிளவு (Nuclear Fission) என்று அழைக்கிறார்கள்.
இனி யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை இந்த பதிவில் அறிந்து கொள்ளுவோம்.
ஒரு சமயம் நோபிள்ஸ் என்ற நகரத்தில் புதைபொருள் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மண்ணுக்குள் புதைந்திருந்த ஏராளமான கண்ணாடிப் பொருட்கள் கிடைத்தன. பல ஆண்டுகள் புதையுண்டும் அதன் நிறம் மாறாமல் அப்படியே இருப்பதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அந்த கண்ணாடிப் பொருட்களை ஆராய்ச்சி செய்தனர். கண்ணாடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கான காரணம் ஒருவித ஆக்சைடு என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
வில்லியம் ஹெர்ஸ்லெஸ் என்பவர் கி.பி.1781 ஆம் ஆண்டில் புதியதொரு கிரகத்தைக் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த கிரகத்திற்கு கிரேக்கர்களின் வான தேவதையான 'யுரேனஸ்' என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். 24 செப்டம்பர் கி.பி.1789 அன்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மார்ட்டின் கென்ரிக் கிளாபராத் என்பவர் 'பிட்ச்பிளென்ட்' எனும் தாதுவில் புதியதொரு தனிமம் இருப்பதைக் கண்டறிந்தார். கிளாபராத், தான் கண்டுபிடித்த புதிய தனிமத்திற்கு 'யுரேனியம்' என்று பெயர் சூட்டினார்.
யுஜின் பெலிகாட் என்ற ஆராய்ச்சியாளர் கி.பி.1841 ஆம் ஆண்டில் யுரேனியத்தைப் பிரித்து வெற்றி கண்டார். கி.பி.1896 ல் பிரெஞ்சு விஞ்ஞானி ஹென்றி மோய்சன் என்பவர் யுரேனியத்தின் சிறப்புக்கள் பலவற்றை தனது ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டறிந்து வெளியிட்டார்.
பிரான்ஸ் விஞ்ஞானியான ஹென்றி பெக்ரெல் தனது ஆராய்ச்சியில் யுரேனியம் மற்றும் பொட்டாசியம் சல்பேட்டை வைத்து சில பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் யுரேனிய படிகத்திலிருந்து சில புதிய கதிர்கள் வெளியாவதைக் கண்டார். இத்தகைய கதிர்களுக்கு 'பெக்ரல் கதிர்கள்' என்று பெயர் சூட்டினார்.
பெக்ரல் கதிர்களை மேரி கியூரி ஆராய்ச்சி செய்தார். யுரேனியத்திலிருந்து கதிர்கள் வீசும் நிகழ்ச்சிக்கு கதிரியக்கம் என்று பெயரிட்டார். விஞ்ஞானி ரூதர்போர்டு இத்தகைய கதிர்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பெக்கரல் கதிர்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா என்ற பெயர்களைச் சூட்டினார்.
அணுமின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தின் அணு எடை 238.03 ஆகும். ஒரு கிலோ இயற்கை யுரேனியத்தில் ஏழு கிராம் அளவே யுரேனியம் 235 உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.