ஹைதராபாத்தைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒன்று முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் அதிநவீன ட்ரோன் தடுப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு மூலமாக எண்ணைக் கிடங்குகள், அணுசக்தி மையம் போன்ற இந்தியாவின் மிக முக்கிய இடங்கள் மட்டுமின்றி, நகரத்தையும் பலவிதமான ட்ரோன் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியும். இந்தியாவில் இது போன்ற அதிநவீன அமைப்பு உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த புதிய ஏஐ பாதுகாப்பு அமைப்பு, Grene Robotics என்ற தொழில்நுட்ப நிறுவனம் மூலமாக நேரடியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு 'இந்திரஜால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் நகரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்க முடியும். 2014 முதல் 16 வரை ராணுவத்தின் துணைத் தலைவராக இருந்த குருமித் சிங் இந்த அமைப்பை இந்தியாவில் பாதுகாப்பு சவால்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதுகிறார்.
"கடந்த 2021 ஜூன் மாதம் ஜம்மு விமான நிலையத்தின் மீது நடந்த ஆளில்லா விமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அச்சமயத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலால், அதற்கான தீர்வு என்ன என்று நாங்கள் யோசித்தோம். இந்திராஜால் அந்தக் கேள்விக்கு தற்போது பதிலாக அமைந்துள்ளது" என அவர் கூறினார்.
இந்த அமைப்பு 360 டிகிரி கோணத்திற்கான பாதுகாப்பையும் வழங்குகிறது. சரியான நேரத்தில் நகரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, அதை அழிக்கும் திறன் கொண்டது. நான்காயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எல்லா வகையான ட்ரோன்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதாக இந்திரஜால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை உருவாக்கியவர்கள் இந்த அமைப்பால் பெரிய பாதுகாப்பு தளங்களையும், தேசிய தலைநகர் போன்ற பல முக்கிய கட்டிடங்களையும், சர்வதேச எல்லைகளையும் மற்றும் விஐபி கூட்டத்தின்போது ட்ரோன் தாக்குதல்களில் இருந்தும் தடுக்க முடியும் என நம்புகின்றனர். இதனால் இந்திய பாதுகாப்பு அம்சத்தில் கூடுதல் பலம் சேர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.