நாம் நம்முடைய வாழ்வில் தற்போது அதிகப்படியான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இத்தகைய மாசுபாட்டை குறைக்க மரங்களின் தேவை அவசியமாகிறது. ஆனால் உலகில் அதிகப்படியான கட்டிடங்களும் சாலைகளும் நிறைந்த நகரங்களில் அதிகப்படியான மரங்கள் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் செர்பியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் திரவ மரத்தைக் கண்டறிந்துள்ளார்.
இத்தகைய திரவ மரங்கள் செர்பியாவின் தலைநகரில் சாலை ஓரத்தில் உள்ள பெஞ்சுகளில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திரவத்திற்கு உயிர் உள்ளது. மரங்களைப் போலவே இது சுற்றுப்புறத்திலிருந்து காற்றை சுவாசித்து கெட்ட காற்றை எடுத்துக்கொண்டு தூய்மையான காற்றை வெளியிடும். இந்த திரவ மரத்தை நாம் விரும்பும் இடங்களில் மாற்ற முடியும். அறிவியல் என்றுமே நம்மை அதிசயிக்க வைக்கும் ஆச்சரியங்களைக் கொடுக்கக்கூடியது.
இந்த திரவ மரத்தில் கிளை, இலை, தண்டுகள் என எதுவுமே இல்லை. ஆனால் ஒரு மரம் செய்யும் வேலையை இது கணக்கசிதமாக செய்துவிடும். இந்த திரவ மரத்தின் பெயர் Liquid 3. இதில் தண்ணீருடன் மைக்ரோ ஆல்கே என்ற நுண்பொருள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த மைக்ரோ ஆல்கே, சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரின் உதவியால் வாழும் உயிர். இந்த திரவ மரம் வைக்கும் இடத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை தூய்மையாக்குகிறது. எனவே மரங்கள் வளர்க்க முடியாத பெறுநகரங்களில் இது உதவிகரமாக இருக்கும்.
ஒரு திரவ மரத்தொட்டி, 20 வயது மரம் தூய்மைப்படுத்தும் காற்றின் அளவுக்கு தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது. அதாவது ஒரு மரத்தை இன்று நட்டு 20 வருடங்கள் கழித்து நாம் அதன் பலனை அனுபவிப்பதற்கு பதிலாக ஒரே நாளில் இந்த தொட்டியை அமைத்து அந்த பலனை நாம் பெறலாம். இதனால் மக்களுக்கு நல்லது என்றாலும், எதிர்காலத்தில் இதை காரணமாக வைத்து மரங்களை அழித்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கத்தான் செய்கிறது.
என்னதான் இந்த திரவ மரம், சராசரி மரங்களை விட நமக்கு பலனைக் கொடுத்தாலும் நிஜ மரங்கள்தான் இயற்கையின் இன்றியமையாத சொத்துக்கள். எனவே அவை இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது. மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவாகக் கூட மாறலாம்.