
Lunar eclipse 2025: நாம் வாழும் இந்த பூமி, பரந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறிய கிரகம் மட்டுமே. சூரியனைச் சுற்றி வரும் பூமியுடன், சந்திரனும் இணைந்து பயணிக்கிறது. இந்த விண்வெளிப் பயணத்தில் சில அரிய தருணங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு அற்புதமான நிகழ்வு தான் சந்திர கிரகணம். அந்த வகையில் 2025ம் ஆண்டு சந்திர கிரகணத்தை எப்போது, எப்படி பார்க்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் வாசிப்போம்.
சந்திர கிரகணம் 2025 எப்போது? | When is Lunar eclipse 2025?
2025 ஆம் ஆண்டின் மூன்றாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7 (நாளை) ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் இரவு 9:56க்கு தொடங்கி நள்ளிரவு 1:26 மணிக்கு நிறைவடைகிறது.
சந்திர கிரகணம் 2025 என்றால் என்ன? | What is Lunar eclipse 2025?
சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழும் இயற்கை வானியல் நிகழ்வாகும். அதாவது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதனால் சந்திரன் சிகப்பு நிறத்தில் தோன்றும். இதையே உலகம் முழுவதும் “Blood Moon” இரத்த சிவப்பு நிலா என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, நாளை நிகழும் இந்த கிரகணத்திலும் நிலா இரத்த நிறத்தில் தோன்றும் என்று கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் 2025 ஐ எவ்வாறு பார்ப்பது? | How to see Lunar eclipse 2025?
இந்த கிரகணத்தை வெறும் கண்களாலேயே பாதுகாப்பாகக் காணலாம். இதற்கான சிறப்பு கருவிகள் அல்லது பாதுகாப்புக் கண்ணாடிகள் எதுவும் தேவையில்லை. தெளிவான வானமும், வெளிச்சம் மற்றும் மாசு குறைந்த இடமும் முழு நிலாவையும் தெளிவாக ரசிக்க உதவும்.
சந்திர கிரகணம் 2025 பல்வேறு நகரங்களில் | Lunar eclipse 2025 in different cities
உலகளவில், இந்த கிரகணம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் தென்படும். இந்தியாவில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் முழுமையாக காண முடியும். குறிப்பாக தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மாசு குறைந்த மலை பகுதிகளில் தெளிவாக காண முடியும்.
சந்திர கிரகணம் 2025 இன் விளைவு | Effect of Lunar eclipse 2025
சந்திர கிரகணத்தை பற்றிய பல மூட நம்பிக்கைகள் உலக அளவில் பரவலாக உள்ளன. குறிப்பாக கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, கிரகண நேரத்தில் நிலாவை பார்க்க கூடாது போன்ற நம்பிக்கைகள் உள்ளன.
ஆனால், வானியல் ஆய்வாளர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், இவை அனைத்தும் அறிவியல் ஆதாரமற்றவை என்று வலியுறுத்துகின்றன. சந்திர கிரகணம் என்பது இயற்கையின் அழகான நிகழ்வு மட்டுமே. உடல்நலத்திற்கோ, சுற்றுச்சூழலிற்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த ஆண்டு நிகழும் இரத்த சிவப்பு நிற நிலாவை, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சந்தோஷமாக கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.