அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாகவே, மெட்டா நிறுவனத்தின் Threads என்ற புதிய செயலி பிரைவசி சர்ச்சையில் சிக்கியிருக்கும் சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எலான் மஸ்கின் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் Threads என்ற புதிய செயலியை உருவாக்கி வருகிறது என்ற தகவல் வெளிவந்தவுடன், அதைக் கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உங்களுடைய இந்த முடிவாவது புத்திசாலித்தனமாக இருக்குமா?" என பதிவிட்டிருந்தார். இதற்கு மார்க் ஜூகர்பெர்க்கின் ஆதரவாளர்கள், "அவருக்கு தற்காப்பு கலை எல்லாம் தெரியும், எச்சரிக்கையாக இருங்கள்" என எதிர்க் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்தனர்.
அதற்கு எலான் மஸ்க், "நான் கூண்டு சண்டை போடுவதற்கு தயார்", என பதிவிட்டதால், "சரி சண்டைக்கான இடத்தை சொல்" என மார்க் ஜூகர்பெர்கும் காட்டமாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப்போட்டார். இப்படி இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட நிலையில், உண்மையிலேயே அவர்கள் இருவரும் சண்டை போடப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களின் சண்டைக்குக் காரணமாக இருந்த திரெட்ஸ் செயலி, தற்போது பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. ஆனால் யாரும் இதை பதிவிறக்கி பயன்படுத்த முடியவில்லை. இந்த செயலி வருகிற 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் முதலில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த செயலி சார்ந்து மற்றொரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. அதாவது ஆரோக்கியம், உடற்பயிற்சி, நிதி, தொடர்புகள், பயனர்களின் வரலாறு, இருப்பிடம், தேடல் வரலாறு, அடையாளங்கள் போன்ற பிற முக்கிய தகவல்கள் அடங்கிய தரவுகளை, Threads செயலி சேகரிக்கக்கூடும் என Apple ஆப் ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ பட்டியல் வெளிப்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020இல் 'பிரைவேசி லேபிள்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் ஸ்டோரில் தன் செயலியை வெளியிடும் வெளியீட்டாளர்கள், அவர்கள் பயனர்களிடம் எம்மாதிரியான தகவல்களைச் சேகரிக்கிறார்கள் என்பதை பிரைவசி லேபிள் என்ற பக்கத்தில் வெளியிடவேண்டும். இது பயனர்கள் ஒரு செயலியை பயன்படுத்தும்போது அவர்களின் எந்தெந்த தரவுகள் அதில் சேகரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கொண்டுவரப்பட்டது.
இந்தப் பிரைவேசி லேபிளில் தான், Threads செயலி பயனர்களின் எதுபோன்று தரவுகளை சேகரிக்கிறது என்பது அனைத்தும் காட்டப்பட்டது. இதில் பெரும்பாலும், நம் சாதனத்தில் இருக்கும் எல்லா தகவல்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என போடப் பட்டுள்ளதால், மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நம் தரவை சேகரிக்கிறார்கள் என்பதால், இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை என சிலர் கூறுகின்றனர்.