சென்னை பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்த சிட்டிஸ் திட்டம் அறிமுகம்.
நவீன தொழில்நுட்பங்களின் உடைய வளர்ச்சி தற்போது அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து இருக்கக் கூடிய வேளையில் வருங்கால தலைமுறையினருக்கு நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திறனை மேம்படுத்த உலகம் முழுவதும் பள்ளி பருவத்து மாணவர்களிடமிருந்து இருந்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் பயிற்சி அளிக்கும் புதிய கல்வி முறை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை மற்றும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் இணைந்து இந்தியாவின் 12 நகரங்களில் அதிநவீன தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்க தொடர் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அரசுப் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்த சிட்டிஸ் என்ற திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியின் 28 அரசு பள்ளிகளில் 92.25 கோடி செலவில் பிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் 76.20 கோடி கடன் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை பள்ளியில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், அதிநவீன விளையாட்டுக் கட்டமைப்பு, கழிவறை மேம்பாடு, ஆசிரியர் நவீன திறன் வளர்ப்பு பயிற்சி, ஸ்டெம ஆய்வகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு கணினி கையாளுவது குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றியும், கையாளும் முறை, செயல்படுத்தும் முறை குறித்தும் விளக்கப்படுகின்றன. இது மட்டும் அல்லாது பள்ளி மாணவர்களுக்கான திறனை வளர்க்கும் பொருட்டு அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள சிறுவயதிலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பதும் இதனுடைய சிறப்பு அம்சமாகும்.
இந்த நிலையில் சிட்டிஸ் திட்டத்தின் மூலம் மேலும் 11 பள்ளிகளை நவீன மயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும் உயர்தர அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.