ட்விட்டர் பதிவுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் எலான் மஸ்க். அதற்கு அடுத்தபடியாக அவருக்கு கருத்துக் கணிப்புகள் கேட்பது அதிகம் பிடிக்கும். ஒருமுறை டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் கிட்டத்தட்ட 51.8% நபர்கள் டொனால்ட் டிரம்ப் வர வேண்டும் என்று வாக்களித்தனர். அந்தக் கருத்து கணிப்பு போலவே டொனால்ட் டிரம்ப் உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.
அதேபோல ட்விட்டரில் தன்னைப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார். அதில் "தான் சிஇஓ பதவியிலிருந்து விலகி வேறு ஒருவர் இந்த நிறுவனத்தை நடத்த வேண்டுமா" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் கிடைத்த முடிவுக்கு பிறகு ட்விட்டரில் இனி யாரெல்லாம் கருத்துக்கணிப்புகளுக்கு வாக்களிக்கலாம் என்ற விதிகளையே மாற்றுவதற்கு மஸ்க் உத்தரவிட்டார்.
இந்த வாக்கெடுப்பில் 17 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். இதில் 57% எலான் மஸ்க் சிஇஓ பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை எதிர்த்து ஒரு பயனர் இதுபோன்ற வாக்கெடுப்புகளில் AI Bot பயன்படுத்தி உங்களுக்கு சாதகமாகக் கூட வாக்கு போட்டுக்கொள்ள முடியும் என்று சாடினார்.
இதற்கு இன்னொரு பயனர், ட்விட்டரில் Blue டிக் வாங்கிய நபர்கள் மட்டுமே வாக்களிக்கும் படியான மாற்றத்தைக் கொண்டு வந்தால், இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படாது என்று பதில் அளித்திருந்தார். இந்த கருத்திற்கு எலான் மஸ்க் "நல்ல யோசனை, இதற்கான மாற்றங்களை விரைவில் கொண்டு வருவோம்" என்று கூறினார்.
எனவே, வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைட் செய்யப்பட்ட கணக்குகள் மட்டுமே கருத்துக் கணிப்புகளுக்கு வாக்களிக்க முடியும் என்ற மாற்றத்தை தற்போது கொண்டு வந்துள்ளார். அதேபோல இனி வெரிஃபைட் செய்யப்பட்ட கணக்குகள் மட்டுமே 'For You' என பிறருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுதான் AI பாட் செயல்பாடுகளை நீக்குவதற்கான ஒரே வழியாகும்.
அதேபோல, இனி பணம் கட்டினால்தான் முன்பிலிருந்தே வெரிஃபைட் செய்யப்பட்ட கணக்குகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க முடியும் எனவும், இதை மீறுபவர்கள் அடுத்த மாதத்தில் தங்களுடைய வெரிஃபைட் பேட்ஜை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ட்விட்டர் Blue பதிப்பிற்கு மாதம் 8 டாலர்கள் செலுத்தியவர்கள் மட்டுமே தொடர்ந்து அதன் அம்சங்களை உபயோகிக்க முடியும்.
மேலும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு எந்த கட்டணமும் இல்லாமல் சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் திட்டம் முடக்கப்பட்டு, ப்ளூ டிக் மார்க்குகளை உடனடியாக அகற்றுவோம் என்று ட்விட்டர் தரப்பில் அதிரடியாக கூறப்பட்டுள்ளது.