இனி கூகுள் பயன்படுத்துபவர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்தால், தானாகவே அவர்களின் அருகிலுள்ள மனநல மருத்துவர்களிடமிருந்து மெசேஜ் வந்துவிடும்.
தினசரி உலகம் முழுவதும் அதிகப்படியான தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது பல தற்கொலைத் தடுப்புத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனநல மருத்துவ மனைகளுடன் ஒன்றிணைந்து, அட்டகாசமான திட்டம் ஒன்றை செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.
சொல்லும் அளவுக்கு பெரிய காரணம் இல்லை யென்றாலும், சிறிய மன உளைச்சல் ஏற்பட்டால் கூட பலர் தன் மதிப்புமிக்க உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் மட்டுமின்றி, அவர்களை நம்பியிருக்கும் குடும்பமும் வெகுவாக பாதிக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை, காதல் விவகாரத்தால் தற்கொலை, ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்தால் தற்கொலை, தேர்வு பயத்தால் தற்கொலை என நாள்தோறும் பல செய்திகள் வெளியாகிறது. ஆனால் இதன் பின்னால் அந்த குடும்ப நபர்கள் எந்த அளவுக்கு வேதனைக்குள்ளாகி இருப்பார்கள் என நாம் கவனிப்பதில்லை. ஒருவரின் தற்கொலை அந்த குடும்பத்தின் எதிர்காலத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும்.
இதைத் தடுக்கும் விதமாக அரசாங்கமும், பல தனியார் நிறுவனங்களும் பல முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இதில் கூகுள் நிறுவனம் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனநல மருத்துவமனைகளுடன் கைகோர்த்து, அவர்களின் ஹெல்ப் லைன் நம்பர்களைத் தற்கொலை செய்துகொள்ள என்னும் நபருக்கு நேரடியாகவே கொண்டு சேர்க்க வழிவகை செய்கிறது.
அதாவது ஒரு நபர் கூகுளில் தற்கொலை தொடர்பான எந்த வார்த்தையைத் தேடினாலும் அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறிந்து, உடனே அவருக்கு அருகே உள்ள தற்கொலைத் தடுப்பு நிறுவனங்கள் அல்லது மனநல மருத்துவர்களின் ஹெல்ப்லைன் எண்களை உடனடியாகத் திரையில் தோன்ற வைக்கும். இதையும் பொருட்படுத்தாமல் அந்த நபர் தொடர்ந்து தற்கொலை தொடர்பான வார்த்தைகளைத் தேட முற்பட்டால், நேரடியாக மனநல மருத்துவரிடமிருந்தே மெசேஜ் வந்துவிடும்.
இந்த திட்டமானது முதற்கட்டமாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 988 தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து கூகுள் இதை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை எதிர்காலத்தில் உலகம் முழுவதும் அமல்படுத்த உள்ளதாகவும், இந்தியாவில் ஏற்கனவே ஹெல்ப்லைன் நம்பர்களை பயனர்களுக்குக் காட்டி வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
தற்போது வாழ்க்கையில் ஏற்படும் கடினமான நிகழ்வுகளை எதிர்கொள்ள பலரும் தயாராக இருப்பதில்லை. நம்மையும் மீறி சில செயல்கள் நடக்கும் போதும், தோல்வியடையும் போதும், அவமானப்படும் போதும் ஏமாற்றப்படும்போதும் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். இவை அனைத்துமே காலப்போக்கில் மாறிவிடக்கூடும். இதைக் கருத்தில்கொண்டு, தவறான முடிவுகளை யாரும் உடனடியாக எடுத்து விடவேண்டாம்.