இனி பெட்ரோல், டீசல் வேண்டாம், காற்றில் பயணிக்கும் பிரம்மாண்ட கப்பல்!

Pyxis Ocean
Pyxis Ocean

காற்றைப் பயன்படுத்தி இயங்கும் பாய்மரக் கப்பல்கள் பழமையான கடல் சார்ந்த தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் என்றாலும், இதில் தற்போது புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு அடுத்த பரிணாமத்தை எட்ட உள்ளது. 

பிரிட்டன் நாட்டில் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட Pyxis Ocean என்ற சரக்குக் கப்பல் தனது முதல் சோதனை பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. இதை வாடகைக்கு எடுத்துள்ள கார்கில் என்ற நிறுவனம், காற்று மூலமாக கப்பலை இயக்குவதற்கான தொழில்நுட்பம், போக்குவரத்து துறையில் நல்ல எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த உதவும் எனக் கூறியுள்ளது. 

இந்தக் கப்பலை இயக்குவதற்காக, கப்பலின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் Windwings எனப்படும் புதிய வகை பாய்மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கப்பல் இயங்கும்போது அதிலிருந்து வெளியேறும் கார்பன் அளவு வெகுவாகக் குறையும் எனச் சொல்லப்படுகிறது. உலக அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை எடுத்துக்கொண்டால் கப்பல் போக்குவரத்துத் துறையின் பங்கு 2.1 சதவீதமாக உள்ளது. 

முதற்கட்டமாக சீனாவிலிருந்து பிரேசில் நோக்கி பயணிக்க திட்டப்பட்டுள்ள இந்த சரக்குக் கப்பலின் பயணம், காற்றை பயன்படுத்தி கப்பலை இயக்குவதற்கான முதல் சோதனையாகும். அந்த காலத்தில் கப்பலை இயக்குவதற்கு பயன்படுத்திய பாரம்பரிய முறையில் தற்போது கப்பல்களை இயக்குவது ஒரு நல்ல வழியாக இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்கு இது வாய்ப்பாகவும் அமையும் என்கின்றனர். இந்தக் கப்பலின் எடை சுமார் 43 ஆயிரம் டன்கள் எனவும், இதன் நீளம் 229 மீட்டர் எனவும் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முயற்சியால் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், புதிய கப்பல்களில் இந்த காற்றில் இயங்கும் தொழில்நுட்பம் நிறுவப்படும் எனச் சொல்லப்படுகிறது. கப்பல்களில் இத்தகைய பாய்மரங்களைப் பயன்படுத்துவதால் எரிபொருள் அதிகமாக சேமிக்கப்படும் என்பதால், ஒரு கப்பலில் நான்கு பாய் மரங்களை பயன்படுத்தினால் மேலும் கூடுதலாக எரிபொருளை சேமிக்கலாம் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் 20 டன்னுக்கும் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்கலாம். 

காற்றைப் பயன்படுத்தி கப்பலை இயக்கும் தொழில்நுட்பம் பிரிட்டனில் இருந்தாலும், அத்தகைய கப்பலை வடிவமைப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் எஃகு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். சீனாவிலிருந்து எஃகை இறக்குமதி செய்வதற்கு பிரிட்டன் அரசு ஆதரவு அளிக்காத நிலையில், இந்த தொழில்நுட்பத்தை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் பிரச்சனை உள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com