பெட்ரோலும் வேண்டாம்; கரண்டும் வேண்டாம்! கலக்கப்போகும் புது வகை கார்!

பெட்ரோலும் வேண்டாம்; கரண்டும் வேண்டாம்!
கலக்கப்போகும் புது வகை கார்!

பெட்ரோல் போட்டால் ஓடும் கார், டீசல் போட்டால் ஓடும் கார் என்ற நிலை மாறி, தற்போது எலெக்ட்ரிக் சார்ஜ் செய்தாலே பல கிலோ மீட்டர் தொலைவுக்குக் காரை ஓட்டலாம் என்ற நிலை வந்துள்ளது. அதையும் தாண்டி இப்போது இந்தியாவில் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் தொழில் நுட்பத்தில் இயூனிக் 7 என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்த உள்ளது எம்ஜி நிறுவனம்.

இந்த வகை காருக்கு பெட்ரோல், டீசல் மற்றும் கரண்டு என எதுவும் தேவையில்லை. இது முழுவதும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ஒரு காராகும். இந்த காரில் எலெக்ட்ரிக் மோட்டார் கிடையாது. அதற்கு மாறாக, இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் பெட்ரோலுக்கு பதில் ஹைட்ரஜன் எரி வாயுவே எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். மேலும், இதுபோன்ற எரிபொருள் பயன்படுத்தப்படுவதால சுற்றுச்சூழலுக்கும் எந்த வகை கெடுதலும் ஏற்படுவதில்லை. வழக்கமாக கார்கள் ஓடும்போது வெளிப்படும் புகை இந்தக் கார்களில் வருவதில்லை. அதற்கு மாறாக, தண்ணீர் அதாவது எரியாத ஹைட்ரஜன் வெளிப்பட்டு வெளியில் உள்ள காற்றுடன் கலந்து அதிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்து H2o ஆக மாறுகிறது.

எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரம் செலவிட வேண்டும். ஆனால், இந்தக் காருக்கு ஹைட்ரஜன் வாயுவை ரீஃபில் செய்தாலே போதும். இதற்காக இந்தக் காரில் 6.4 கிலோ அதிக பிரஷர் கொண்ட ஹைட்ரஜன் சிலிண்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் காலியானதும் அடுத்த மூன்று நிமிடங்களில் ரீஃபில் செய்து கொள்ளலாம். ‘ஒரு முறை ரீஃபில் செய்தால் சுமார் 605 கி.மீ. தொலைவு வரை இந்தக் காரில் பயணிக்க முடியும். அதோடு, இந்தக் கார் 824 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கார் மிகவும் பாதுகாப்பானது, எளிதில் விபத்துக்களை ஏற்படுத்தாது’ என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை கார்களை 2001ம் ஆண்டு முதன்முதலில் அறிமுகம் செய்தது எம்ஜி நிறுவனம். தற்போது மூன்றாவது முறையாக அப்டேட் செய்யப்பட்டு இந்த வகை கார் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இம்முறை ஹைட்ரஜன் ப்யூயல் செல்கள் இன்டர்கிரேட்டட் டிசைன், நீடித்த உழைப்பு, அதிக பவர் திறன், அதிக நம்பகத்தன்மை, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாறிக்கொள்வது என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் விற்பனைக்கு வந்தால் கார் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com