இனி இன்ஸ்டாகிராமிலேயே ரீல்ஸ் பதிவிறக்கம் செய்யலாம்.

இனி இன்ஸ்டாகிராமிலேயே ரீல்ஸ் பதிவிறக்கம் செய்யலாம்.
Published on

விரைவில் இன்ஸ்டாகிராமிலேயே அதன் பயனர்கள் ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இது பொதுக் கணக்குகளால் பதிவிடப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. 

பயனர்களின் நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் இறுதியாக அதில் பதிவேற்றப்படும் ரீல்களை, தன் சொந்த தளத்திலேயே பதிவிறக்கம் செய்யும் புதிய அம்சத்தை வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமின் போட்டியாளரான டிக் டாக்கில் இருந்து வந்தது. டிக் டாக்கில் உள்ள காணொளியைப் பதிவிறக்கம் செய்யும்போது அந்த நிறுவனத்தின் வாட்டர் மார்க் உடன் சேர்ந்து வரும். ஆனால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரீல்களை பதிவிறக்கம் செய்யும்போது வாட்டர் மார்க் வருமா வராதா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.  

இன்ஸ்டாகிராம் தளத்தின் தலைவரான 'ஆடம் மொசெரி' சமீபத்தில்தான் இந்த அம்சத்தைப் பற்றி அறிவித்தார். தற்போது இது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பயனர்கள் தங்கள் சாதனங்களில் ரீல்களை அப்படியே பதிவிறக்கம் செய்ய முடியும். இதுவரை இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்களை பதிவிறக்கம் செய்வதற்கு, அதன் பயனர்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் குறிப்பிட்ட ரீலின் லிங்கை நகலெடுத்து, வேறொரு மூன்றாம் தரப்பு செயலி அல்லது இணைய தளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்ய, பல தந்திரங்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.  

இன்ஸ்டாகிராம் ரீல்களை எவ்வாறு Download செய்வது?

  1. நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீல்களைத் தேர்வு செய்யவும். 

  2. அந்த ரீல்களின் வலதுபுரத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ஷேர் ஐகானைத் தொடவும். 

  3. பின்னர், அதில் காட்டும் டவுன்லோட் என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்தால், குறிப்பிட்ட ரீல்ஸ் உங்கள் சாதனத்தில் டவுன்லோட் ஆகிவிடும். 

இன்ஸ்டாகிராம் ரீல்களை சாதனத்தில் பதிவிறக்கம் செய்தவுடன், பயனர்கள் வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் இன்ன பிற சமூக ஊடகங்களில் அவற்றைப் பகிரலாம். இருப்பினும் பொது கணக்குகளில் பதிவிடப்பட்ட ரீல்கள் மட்டுமே பிறர் பதிவிறக்கம் செய்வதற்கு தகுதிபெறும். மேலும் இன்ஸ்டாகிராமில் உள்ள பயனர்கள்தான் பதிவிடும் காணொளியை பிறர் பதிவிறக்கலாமா வேண்டாமா என்பதை அந்த கணக்கை வைத்திருப்பவரே தீர்மானம் செய்து கொள்ளலாம். 

இனி தாங்கள் விரும்பும் ரீல்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் எளிதாக வைத்துக் கொள்ளலாம் என்கிற மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com