
Science Fiction திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக் கருதப்பட்ட இருட்டில் பார்க்கும் திறன், இப்போது நிஜமாகி வருகிறது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இரவுப் பார்வையை சாத்தியமாக்கும் ஒரு புரட்சிகரமான காண்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய காண்டாக்ட் லென்ஸ்கள், வழக்கமான லென்ஸ்களைப் போலவே நெகிழ்வான பாலிமர்களுடன் நானோ துகள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நானோ துகள்கள், சாதாரண கண்களுக்குப் புலப்படாத அகச்சிவப்பு ஒளியை உள்வாங்கி, அதைப் பாலூட்டிகளின் கண்களுக்குத் தெரியும் ஒளியாக மாற்றும் அற்புதம் இதில் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக, 800-1600 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அகச்சிவப்பு ஒளியைக் கண்டறியும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை இருளாகத் தெரிந்த உலகம், இந்த லென்ஸ்கள் மூலம் புதிய பரிமாணத்துடன் காட்சியளிக்கும்.
இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம், இதற்கு மின்சக்தி ஆதாரம் தேவையில்லை என்பதே. தற்போதுள்ள இரவுப் பார்வைக் கருவிகள் அனைத்தும் பேட்டரி மூலம் இயங்கும் நிலையில், இந்த லென்ஸ்கள் மின்சக்தி இல்லாமல் இயங்குவது, அதன் பயன்பாட்டை மிக எளிதாக்குகிறது. இது மனிதர்களுக்கு 'சூப்பர் பார்வை'யை வழங்கும் ஒரு புதிய சகாப்தத்தைத் திறக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
இதன் ஆரம்பகட்ட சோதனைகள் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டன. தொடக்கத்தில் இருண்ட பெட்டிகளைத் தவிர்த்த எலிகள், இந்த லென்ஸ்களை அணிந்ததும், அகச்சிவப்பு ஒளியால் ஒளிரும் பெட்டிகளைப் போலவே இருண்ட பெட்டிகளையும் தேர்ந்தெடுத்தன. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளிலும், பங்கேற்பாளர்கள் அகச்சிவப்பு ஒளியை உணர முடிந்ததுடன், அதன் திசையையும் துல்லியமாக அறிய முடிந்தது.
இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்புத் துறை, மீட்புப் பணிகள், கள்ளநோட்டுகளைக் கண்டறிதல், பனிமூட்டம், தூசியால் தெளிவற்ற சூழல்களில் பார்வை மேம்படுத்துதல் போன்ற பல துறைகளில் பெரும் பங்காற்றும். அறிவியல் புனைகதை திரைப்படங்களில் கண்ட காட்சிகள், இனி நம் நிஜ வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வரலாம். இந்த புதிய காண்டாக்ட் லென்ஸ் தொழில்நுட்பம், மனிதனின் பார்வை திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, இதுவரை அறியாத புதிய உலகத்தை நமக்குத் திறக்கும் என்பதில் சந்தேகமில்லை.