இணையத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் OpenAi நிறுவனத்தின் ChatGPT பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது யாருக்கு பிரச்னையை ஏற்படுத்துமோ இல்லையோ, கூகுள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே BARD என்ற பெயரில் ஒரு Chatbot-ஐ வெளியிடப் போவதாக, அதன் தலைமைச் செயல் அதிகாரி திரு. சுந்தர்பிச்சை அவர்கள் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே, மக்கள் மத்தியில் இதன் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.
இதைப் பற்றி சுந்தர்பிச்சை கூறியதாவது,
"எங்களுடைய BARD AI தொழில்நுட்பம், LaMDA (Language Model for Dialogue Application) என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இதனை எங்கள் நிறுவனத்தில், நம்பத் தகுந்த சோதனையாளர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே கொடுத்துள்ளோம். விரைவில் இதனுடைய சோதனை ஓட்டம் மக்களுடைய பயன் பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில், கூகுள் அதனுடைய நேரடி செயல்பாட்டைத் தனது YouTube பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார்கள். இந்த நிகழ்வில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, BARD Chatbot தவறான பதில் கூறியுள்ளது. அந்த தருணத்தில் அதைப்பற்றி யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, அது வெளியிட்ட முடிவின் புகைப்படத்தை, கூகுள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியதால், சிறிது நேரத்திலேயே இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
"அதெப்படி ஒரு தவறான பதிலை அந்த Chatbot கொடுக்கலாம்?
ChatGPT-ல் உள்ள துள்ளியத்தன்மையை இதில் இருக்காது போலவே?" என்று பலரும் விமர்சனம் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
இதன் விளைவாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்-ன் பங்குகள் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சரிவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.