ஓநாய்கள் ஆடும் சதுரங்க வேட்டை - சிக்கித் தவிக்கும் மனிதர்கள்!

Online Scam
Online Scam
Published on

- தா.சரவணா

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு முழு காரணம், நம்முடைய பேராசை மட்டும்தான். ஏனெனில் உழைக்காமல், வெகு சீக்கிரம் பணக்காரராகி விட வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் வேரூன்றிப் போய்க் காணப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல, அனைவர் கைகளிலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் திருடர்கள், நமக்கு ஏதாவது ஒரு குறுந்தகவலை அனுப்புவர். நாம் அதன் உள்ளே சென்று பார்த்தால், நான்கே மாதங்களில் நம்மை அம்பானியாகவும், அதானியாகவும் மாற்றுவதாக சத்தியம் செய்திருப்பார்கள். அந்த நேரத்தில், இவர்கள் நம்மை அம்பானியாகவும், அதானியாகவும் மாற்றும் நேரத்தில், அவர்கள் ஏன் அப்படி மாற வில்லை? என்ற கேள்வி மனதினுள் எழ வேண்டும். ஆனால், பேராசை உச்ச கட்டத்தில் இருக்கும் போது, மூளை மழுங்கி விடும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை ஆகும்.

அதன் பின்னர் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் பின் சென்று, சில பல லட்சங்களை இழந்து (அந்தப் பணத்தை வைத்து டீ கடை போட்டிருந்தால், தொழிலதிபர் ஆகியிருக்கலாம் என்பது வேறு விஷயம்) அதன் பின்னர் எதிர் தரப்பில் இருந்து எந்த ஒரு ரெஸ்பான்சும் இல்லாத போதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டது, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிய வரும். அதன் பின்னர் சைபர் கிரைமுக்குச் சென்று புகார் அளித்து விட்டு பணம் வருமா? வராதா? எனக் காத்திருக்கும் பலர் இங்கு உண்டு. இந்த மோசடிகள், காட்டுக்குள் இருக்கும் ஓநாய்களின் மூளையை ஒத்துடையதாக, எவ்வித கருணையும் இல்லாததாக உள்ளது.

இது போன்ற மோசடிகளை நம்பாதீர்கள் என தமிழகம் முழுவதும் ஆன்லைன் ஏமாற்றம் குறித்த விழிப்புணர்வுகளை சைபர் கிரைம் போலீசார் செய்து வந்தாலும், நம்மவர்கள் ஏமாறுவதற்கு முன் நிற்பதால், ஒன்றும் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்க EV கார் வச்சிருக்கீங்களா? போச்சு! மழைக்காலத்தில் ஜாக்கிரதை! 
Online Scam

உங்களுக்கு 5 பில்லியன் அமெரிக்கன் டாலர் பரிசாக வந்துள்ளது. அதைப் பெற வேண்டும் என்றால், 3 லட்சம் ரூபாய் எங்களுக்குச் செலுத்த வேண்டும். பணம் கப்பலில் வந்து கொண்டிருக்கிறது என்பது போன்றவற்றை கூட நம்பும் மனநிலை நம்மில் பலரிடம் உள்ளது.

முகநுால் பக்கத்தில், வெளிநாட்டு பெண் பெயரில் நட்பு வேண்டி விண்ணப்பம் வந்தால் தயவு செய்து யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில், நட்பு என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் பேசத் தொடங்குவார்கள். பின்னர் நமக்காக விலை உயர்ந்த பரிசு அனுப்பி வைத்துள்ளேன் என்பார்கள். பின்னர் அந்த பரிசுக்கு சுங்க வரியாக குறிப்பிட்ட தொகை செலுத்தி வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள். அந்தப் பணத்தை நாம் அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்ததும், அவ்வளவுதான்.

இப்படி சதுரங்க வேட்டையாக நம்மை வேட்டையாட பலரும் காத்துள்ளனர். இவர்களின் வேட்டையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, அறிவியல் முன்னேற்றங்களை உருப்படியானவற்றுக்கு மட்டும் பயன்படுத்துதல் ஆகும்.

இறுதியாக பணம் கை விட்டுப் போனால், 1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளித்தால், பணம் திரும்பி வந்தால், அது உங்களுடைய முன்னோர் செய்த புண்ணியம் அன்றி வேறொன்றும் கிடையாது...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com