

பெர்சவரன்ஸ் ரோவர் (விடாமுயற்சி) என்ற நடமாடும் விண்வெளி ஆய்வு வாகனத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய அனுப்பிய இந்த ரோவர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரகத்தின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இது செவ்வாயில் தரையிறங்கியதிலிருந்து நிறைய சாதனைகளை செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் எரிமலைகள் உள்பட சில முக்கியப் பகுதிகளை நெருக்கமாகப் பார்க்க இந்த ரோவர் நாசாவிற்கு உதவியுள்ளது. மேலும் கிரகத்தின் பண்டைய ஏரிப்படுகைகளைச் சுற்றிப் பயணம் செய்து, மேற்பரப்பில் உள்ள பாறைகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆய்வின்படி செவ்வாயில் ஒரு காலத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருந்த பெர்சவரன்ஸ் ரோவர், ஜெஸெரோ என்ற பள்ளத்தில் ஆச்சர்யம் மிகுந்த பாறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. சுமார் 80 சென்டிமீட்டர் அகலமுள்ள இந்த கல்லிற்கு பிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று பெயர் சூட்டப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் நிறைய கற்கள் மற்றும் பாறைகள் இருந்தும், இந்த சிறிய பாறைக்கு மட்டும் எதற்காக பெயர் சூட்டி உள்ளனர், இதற்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்று வினாக்கள் எழலாம்!
இந்த பாறை செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமான கல் இல்லை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இது வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்து விழுந்த ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்பதால், பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வழக்கமான செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பாறைகளுடன் ஒப்பிடும் போது, இதில் உள்ள தாதுக்கள் வேறுபாட்டை உணர்த்துகிறது. இந்த பாறையில் இரும்பு மற்றும் நிக்கல் அதிகமாக இருப்பதால் தான், இதை அந்நிய பொருளாக கருத வேண்டி உள்ளது. கடந்த காலத்தில், செவ்வாய் கிரகத்தின் மீது மோதிய ஒரு விண்கல் என்றும் தெரிகிறது. செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே இரும்பு, நிக்கல் எல்லாம் கண்டறிந்தாலும் இந்த பாறையின் மீது அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
பெர்செவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள மிகவும் அதி நவீன மாஸ்ட்கேம் - இசட் கேமராக்களில் மூலம் இரண்டு படங்களை எடுத்தது. அந்த படங்களை பார்வையிட்ட நாசா விஞ்ஞானிகள் அந்தப் பாறையின் தனித்துவமான வடிவத்தை கவனித்தனர். இது பெரியதாகவும், அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மற்றவற்றை விட உயரமாகவும், வினோதமாக தோற்றத்துடனும் காணப்பட்டது.
பெர்செவரன்ஸ் ரோவரில் உள்கட்டமைக்கப்பட்ட ஒரு மினியேச்சர் ஆய்வகம் உள்ளது. அதிலுள்ள சூப்பர் கேம் கருவியின் லேசர்கள் மற்றும் ஸ்பெக்ட்ரோ மீட்டர்களை பயன்படுத்தி ஃபிப்சாக்ஸ்லா பாறையின் இரும்பு மற்றும் நிக்கல் இருக்கும் அளவை கண்டறிந்தனர். தற்போதைய ஆய்வு முடிவை உறுதிப்படுத்த இன்னும் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பிப்சாக்ஸ்லா உண்மையில் ஒரு விண்கல்லாக உறுதி செய்யப்பட்டால், செவ்வாய் கிரகம் மற்றும் சூரிய மண்டலத்தின் ஆரம்பகால வரலாறு குறித்த கூடுதல் தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பிப்சாக்ஸ்லா பாறையின் ஒரு பகுதியை பூமிக்கு கொண்டு வருவது சாதாரணமான ஒரு விஷயமும் அல்ல. ஒரு விண்வெளி கப்பலை தயாரித்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்ப வேண்டும். அது போன்ற விண்வெளி அறிவியல் வளர்ச்சி மேம்பட இன்னும் பல வருடங்கள் வரை ஆகலாம்.