
பள்ளிக் குழந்தைகள் சிலரை அழைத்து, 'நீ வளர்ந்து பெரியவனா(ளா)னதும் என்னவா வருவே?' என்று கேட்டால், அவர்களில் கால்வாசிப் பேராவது 'விண்வெளி வீரரா வருவேன்' என்று பதில்சொல்வார்கள். சிகரம் பெரிது என்றால் வானம் அதைவிடப் பெரிதில்லையா?
இப்படி உலகம்முழுக்கப் பல தலைமுறைகளாக ஏராளமான குழந்தைகள் இந்தக் கனவுடன் வளர்ந்ததால்தானோ என்னவோ, விண்வெளித் துறை ஒவ்வொரு தலைமுறையிலும் மிகப் பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறது. விண்வெளிக்குச் செல்லும் விருப்பத்துடன் வருகிறவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இன்னும் பலர் வருகிறார்கள். பூமியில் இருந்தபடி விண்வெளியை ஆராய்வது, விண்வெளிக்குக் கலங்களை, மனிதர்களை, பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய கருவிகளை உருவாக்குவது, அவற்றைச் செலுத்துவதற்கான, கண்காணிப்பதற்கான, அவற்றுடன் பேசுவதற்கான மென்பொருள்களை எழுதுவது, விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களுக்குத் தேவையான உடைகள், துணைக்கருவிகளைக் கண்டுபிடிப்பது, அங்கிருந்து திரட்டப்படும் தகவல்களை ஆராய்வதற்கான நிரல்களை உருவாக்குவது என்று இந்தத் துறை நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டிருக்கிறது.