
நாம் வாழும் இந்த உலகில் சத்தமில்லாமல் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் நமது பூமியின் சுழற்சி வேகம் பல கோடி ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருகிறதாம். நமது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகரிக்க, அதிகரிக்க பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
'நேச்சர் ஜியோசயின்ஸ்' என்னும் ஆய்விதழ் பூமியின் சுழற்சிக்கும் ஆக்சிஜனுக்கும் இடையே இருக்கும் தொடர்பினை விளக்கியுள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானாதாகக் கூறப்படுகிறது. அப்போது, அதன் சுழற்சி விகிதம் மிக அதிகமாக இருந்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகப் பூமியின் சுழற்சி வேகம் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் ஒரு நாள் என்பதன் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
பல்வேறு ஆய்வுகள் பூமியில் நடக்கும் இந்த மாற்றங்களை உறுதி செய்துள்ளன. 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாளின் நீளம் என்பது 18 மணி நேரமாகவே இருந்ததாம். ஆனால், அது இப்போது அது 24 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு நாளின் நீளம் சுமார் 1.8 மில்லி விநாடிகள் அளவு அதிகரித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பூமியின் வேகம் குறைந்தால் நாளின் நீளமும் அதிகரிக்கும். உண்மையில் பூமியின் சுழற்சியைப் பொறுத்தே உலகில் எல்லாம் நடைபெறுகின்றன. அதிகரிக்கும் ஆக்சிஜனின் அளவால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்தது. பூமியில் உயிரினங்களின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ஒளிச்சேர்க்கை (photosynthesise) மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் சயனோபாக்டீரியா எனப்படும் நீலப்பச்சை பாசிகளின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுமார் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த "கிரேட் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு" (Great Oxidation Event) இதற்கான ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.
நாட்களின் நீளம் அதிகரித்ததால் சயனோபாக்டீரியாக்கள் அதிக அளவிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிந்ததாகவும் இது செடி, கொடிகளின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதாகவும் மேலும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த நுண்ணுயிரிகளின் செயல்பாடு சூரிய ஒளியையும் அவற்றின் வளர்சிதை மாற்றச் செயல்முறைகளின் நேரத்தையும் சார்ந்ததாகவும் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரு நாளின் நீளம் அதிகரித்தது உதவியிருக்கிறது.
சூரியன் உதயமான உடனேயே சயனோபாக்டீரியாக்களால் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியாது. புவியின் சூழ்நிலை மிதமான வெப்பத்திற்கு வந்த பிறகே அதனால் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இதனால் நாளின் நீளம் குறைவாக இருந்தால், ஆக்ஸிஜனின் உற்பத்தி குறையும். அதேநேரம் நாட்களின் நீளம் அதிகரிக்கும்போது, அவை அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன.
புவியில் ஒரு நாளின் நீளத்திற்கும் இந்த நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும். ஆக்சிஜனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை கடலியல் ஆராய்ச்சியாளர் பிரையன் ஆர்பிக் மற்றும் அவரது குழுவினர் உறுதிப்படுத்தினர். நீண்ட நாட்கள் என்பது "ஆக்ஸிஜன் விண்டோவை" (oxygen windows) விரிவுபடுத்தி, வளிமண்டல ஆக்சிஜனின் அளவு அதிகரிக்க உதவி வருவதை அந்த குழு கண்டறிந்ததுள்ளது.
புதிய ஆய்வுகளின் முடிவுகள் கிரேட் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வின் போது மட்டுமல்லாமல், 550 முதல் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நியோப்ரோடரோசோயிக் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வின் (Neoproterozoic Oxygenation Event) போதும் நடந்ததாகக் கூறப்படுகிறது. பூமியின் சுழற்சியும், நிலவின் ஈர்ப்பு விசையும் நமது பூமியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.
இயற்கையின் இந்த அதிசயங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். இவற்றை இரசித்து வாழ்வதுதான் மனிதனின் பணியாக இருக்க முடியும். ஐம்பூதங்கள் இயற்கையின் வடிவில் மிகுந்த சக்தி மிக்கதாய் இருக்கின்றன. அவற்றை மனிதனால் ஒரு நாளும் வெல்ல முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.