Electric vehicles
Electric vehicles

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எழுச்சி!

Published on

உலக வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு இயற்கை பேரிடர்கள் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களின் பயன்பாட்டினால் காற்று மாசுபாடு அதிகரித்து, வெப்பம் அதிகரிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தான் மின்சார வாகனங்கள். இவை அறிமுகமான சில மாதங்களிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், அறிமுகமான புதிதில் சில மின்சார வாகனங்கள் தானாக வெடித்துச் சிதறியதால், பொதுமக்களிடையே சிறிது பயமும் தொற்றிக் கொண்டது. இருப்பினும், மின்சார வாகனங்களின் விற்பனை மட்டும் குறையவில்லை. நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் பெட்ரோல், டீசல் செலவை அறவே குறைத்து விடலாம்; சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என்கிறார்கள் பொதுமக்கள். மின்சார வாகனங்களின் வரவால், இந்தியாவில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் அரங்கேறி விட்டது. 

மின்சார வாகனங்களில் தற்போது இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தான் அதிகளவில் விற்பனையாகின்றன. வாகன உதிரிபாக உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், இந்தியாவில் வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சாரத்தில் இயங்குகின்ற இருசக்கர வாகனங்களின் விற்பனையானது 50 சதவீதமாகவும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையானது 70 சதவீதமாகவும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்குகின்ற காா்கள் மற்றும் கனரக வா்த்தக வாகனங்களை விடவும், மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கும், அதனை பராமரிப்பதற்குமான மொத்தச் செலவும் அனைவரையும் கவரும் வகையில் மிகக் குறைவாக உள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் புதிய மின்சார காா்களின் விற்பனை 10 இலிருந்து 15% வரை இருக்கும்  என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக வா்த்தக வாகனங்கள் பிரிவில் மின்சார வாகனங்களின் விற்பனையானது 5 இலிருந்து 10% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஈ பைக் வாங்க போறீங்களா? அப்போ இதல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
Electric vehicles

மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதனால், பாரம்பரிய வாகனங்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை முன்னிலைப்படுத்தி ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த நிறுவனங்கள் அனைத்தும் மின்சார வாகனப் பிரிவுகளில் தயாரிப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காற்று மாசுபாட்டைக் குறைக்கும் மின்சார வாகனங்களை நோக்கி, ஆட்டோமொபைல் துறையானது மாற வேண்டும். இத்தகைய மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் முன்னணியில் இருக்கின்றன.

கடந்த ஆண்டு 2023 இல், 5.80 இலட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதாக, IEA எனும் சர்வதேச எரிசக்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு சீனாவின் விற்பனையை, இந்தியா மிஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊக்கத்தொகை, மின்சார வாகனங்களின் விலையை குறைக்கப் பெரிதும் உதவியதன் காரணத்தால் விற்பனை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com