மின்சார வாகனங்களின் விலை உயர்வு; விற்பனை சரிவு!

மின்சார வாகனங்கள்
மின்சார வாகனங்கள்
Published on

மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை குறைக்கப்பட்டதை தொடர்ந்து மின்சார வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக மின்சார வாகன விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தனிமனித போக்குவரத்து சாதனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பெட்ரோல் டீசலைக் கொண்டு இயங்கக்கூடிய வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் வரத்து குறைவு, விலை உயர்வு போன்ற காரணங்களால் இதற்கு மாற்றாக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை அறிமுகப்படுத்தின. சுற்றுச்சுழலுக்கு மாசு விளைவிக்காத மின்சார வாகனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உயர்ந்துவந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மாற்றாகவும் மின்சார வாகனங்கள் மாறின.

இதனைத்தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்தது.  அதேபோல், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய, பல சலுகைகள் மத்திய,மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பதிவு செய்யப்படும் ஒட்டுமொத்த வாகனங்களில் 5  சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பதிவு செய்யும்பொழுது செலுத்தப்படும் சாலை வரியை மின்சார வாகனங்களுக்கு  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் வாகனங்களுக்கான ஸ்மார்ட் அட்டைகள் பெறுவதற்காக 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது மட்டும் அல்லாது மின்சார வாகனங்களினுடைய தேவையை அதிகரிக்க எஃப்.ஏ.எம்.இ-2 என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் மின்சார வாகன பேட்டரி திறன் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 மற்றும் அதற்கு மேலும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மொத்த கட்டணத்தில் 40 சதவீதம் வரை குறைவாக செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு கடந்த மே மாதம் மானியத் தொகையை 15 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டது. இதனால் குறைந்தபட்சம்  15,000 முதல் 30,000 ரூபாய் வரை அதிகமான  தொகைகளை கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது. இதனால் தற்போது 50 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக மின்சார வாகன விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com