மக்கள் நலம் காக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)!

Artificial Intelligence
Artificial Intelligence

மனோஜுக்குத் திடீரென்று தலைவலி, ஏதோ ஒரு தைலத்தைத் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ஆனால், தலைவலி கொஞ்சமும் குறையவில்லை.

அதனால், அவர் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஒரு செயலியைத் திறந்தார், அங்கு ஒரு பொத்தானை அழுத்திப் பேசினார், தன்னுடைய சிக்கலை விரிவாக விளக்கினார்.

மறு விநாடி, அவருடைய குடும்ப மருத்துவரின் குரல் கேட்டது, 'மனோஜ், நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு வழக்கமான தலைவலி என்றுதான் தோன்றுகிறது. செல்பேசி, கணினி, தொலைக்காட்சித் திரையைப் பார்க்காமல் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள். அப்போதும் வலி குறையாவிட்டால் நம் மருத்துவமனைக்கு நேரில் வாருங்கள்.'

இங்கு ரகசியம் என்னவென்றால், மனோஜின் குடும்ப மருத்துவர் இப்போது வேறு யாருக்கோ ஒரு பெரிய அறுவைச் சிகிச்சையைச் செய்துகொண்டிருக்கிறார். தன்னுடைய தலைவலியைப்பற்றி மனோஜ் பேசியதை அவர் கேட்கவுமில்லை, மேற்கண்ட அறிவுரையைச் சொல்லவுமில்லை. ஆனாலும் மனோஜுக்குத் தேவையான முதற்கட்ட மருத்துவக் குறிப்புகள் கிடைத்துவிட்டன. 

எப்படி? இது செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் மாயம்.

அதாவது, சற்றுமுன் மனோஜ் தன்னுடைய செல்பேசியில் பேசியபோது, மறுமுனையில் மருத்துவர் யாரும் இல்லை. ஒரு மென்பொருள் அவருடைய பேச்சைக் கேட்கிறது, அதை எழுத்தாக மாற்றுகிறது, அதிலிருந்து முதன்மையான சொற்களைப் பிரித்தெடுக்கிறது, அந்தச் சொற்களைத் தன்னுடைய மருத்துவத் தரவுத்தளத்தில் (Database) தேடுகிறது, இதற்குமுன் தன்னிடம் பேசிய நோயாளிகள் சொன்ன சிக்கல்கள், அதற்குத் தான் கொடுத்த பதில்கள், அதன் வெற்றி, தோல்வி ஆகியவற்றை ஆராய்கிறது, மனோஜின் தனிப்பட்ட மருத்துவக் குறிப்புகளையும் பார்க்கிறது, இதன் அடிப்படையில் அவருக்கு எப்படி உதவலாம் என்று தீர்மானிக்கிறது, அதை மனோஜின் குடும்ப மருத்துவருடைய குரலில் ஒலியாக மாற்றி அவருக்குக் கொடுக்கிறது.

மேலுள்ள எதுவும் கதையில்லை. இன்றைய தொழில்நுட்பத்தில் இவை அனைத்தையும் செய்யலாம், அதற்குமேலும் செய்யலாம். உலகெங்கும் பல மருத்துவ அமைப்புகள் இதைச் செய்யத்தொடங்கிவிட்டன.

Artificial Intelligence
Artificial Intelligence

ஆனால், மருத்துவச் சிக்கல்களுக்குச் செயற்கை நுண்ணறிவை நம்பலாமா?

முழுமையாக நம்புவதற்கில்லை. என்றாலும், அது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடல்நலம்பற்றிய பல அறிக்கைகள், படங்களை ஆராய்ந்து அவருக்கு என்ன பிரச்சனை இருக்கக்கூடும் என்று தீர்மானிக்கிறார். இதற்கு அவருக்கு அரை மணிநேரம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அதே தகவல்களை அரை நிமிடத்தில் ஆராய்ந்து ஒரு பதிலைச் சொல்லிவிடும். அவர் அந்தப் பதிலை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு, தன்னுடைய இயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்த நோயாளியைக் குணப்படுத்தலாம். இதன்மூலம் அவர் மேலும் பலருக்கு உதவலாம்.

இதில் இன்னொரு சிறப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் விரைவாகக் கற்றுக்கொள்ளக்கூடியது. அதனால், ஒருவேளை அது தவறு செய்தாலும், அதை ஒரு மனிதர் (அதாவது, தகுதியுள்ள மருத்துவர்) கண்டறிந்து திருத்திவிட்டால், அடுத்தமுறை அதே தவறு நடைபெறுவதற்கான வாய்ப்பு குறையும்.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

1. மருத்துவ ஆய்வுப் படங்களை (எக்ஸ்-கதிர்ப் படம், ஸ்கேன் படம் போன்றவை) ஆராய்தல்

2. தகவல்களின் அடிப்படையில் நோய்களை அல்லது நோய் வரக்கூடிய வாய்ப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணுதல்

3. நோயாளிகளின் மருத்துவ வரலாறு, பண்புகள், பழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற தனித்துவமான மருத்துவச் சிகிச்சையை வடிவமைத்தல்

4. புதிய மருந்துகளை உருவாக்குதல்

5. உடலில் அணியக்கூடிய கருவிகளைக் கொண்டு நோயாளிகளைக் கண்காணித்தல், தேவையான உதவிக் குறிப்புகளை வழங்குதல்.

இவை ஒருசில எடுத்துக்காட்டுகளே. மக்கள் நலம் காக்கும் மருத்துவத் துறையில், செயற்கை நுண்ணறிவு ஆற்றும் இன்னும் பல ஆச்சர்யங்கள் உண்டு! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com