

கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி நமக்குத் தெரியாத இடங்களைக் கூட எளிதாகக் கண்டுபிடிக்கலாம். நமக்கு அருகிலிருக்கும் உணவகங்கள், கடைகள் போன்றவற்றைத் தேடி தெரிந்துகொள்ள இது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூகுள் மேப்ஸ் நமக்குத் தெரியாத இடத்திற்கு வழிகாட்டுவது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசுவதற்கான செல்போன் எண்களும் அதில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
நாம் கூட கூகுளில் தேடிப்பார்த்து நமக்குத் தேவையான இடத்தின் செல்போன் எண்களைப் பெற்றிருப்போம். ஆனால் இந்த விஷயத்தில் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த நபர் தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அது கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி மோசடியாளர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த நபர் பயணிக்க விருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விமான சேவை நிறுவனத்தின் கஸ்டமர் கேரை அழைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த எண்ணில் தொடர்புகொள்ள முடியாததால், கூகுள் மேப்ஸ்-ல் தேடிப்பார்த்து அதில் கிடைத்த ஒரு ஹாட் லைன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிரே பேசிய நபர்கள் தங்களை விமான நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் போலவே காட்டிக்கொண்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு பதிலாக புதிய டிக்கெட் பதிவு செய்து தருவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவசர நேரத்தில் புக்கிங் செய்வதால் ஒரிஜினல் கட்டணத்தை விட ஐந்து மடங்கு கூடுதல் கட்டணத்தைக் கேட்டுள்ளனர். பின்னர் இவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த அந்த பயணி, இணையத்தில் சில தகவல்களை அறிந்தபோது இவர்கள் மோசடியாளர்கள் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இது தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தெரியப் படுத்தியதும் அவர்களின் ஹார்ட் லைன் நம்பர் சரி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கூகுள் மேப்ஸில் காட்டும் போலி எண்களைத் தொடர்புகொண்டு, பலர் தங்களது பணத்தை இழந்து வரும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. கூகுள் மேப்ஸில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் தொடர்பு எண்களை மோசடியாளர்கள் தந்திரமாக அவர்களுக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கின்றனர். திருத்தப்பட்ட எண்ணிற்கு அழைக்கும் வாடிக்கையாளர்களிடம் லாவகமாகப் பேசி மோசடியை நடத்துகின்றனர். மேலும் கூகுளில் பட்டியலிடப் பட்டிருக்கும் சிறு நிறுவனங்களை மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டு, தாங்கள் கூகுளிலிருந்து அழைப்பதாகக் கூறி அவர்களின் விளம்பரங்களை காண்பிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.
இப்படி இணையத்தை பொருத்தவரை பல வகையில் மோசடி வேலைகள் நடந்து வருகிறது. எனவே கூகுள் அல்லது கூகுள் மேப்பில் காட்டப்படும் நிறுவனங்களின் எண்கள் உண்மையாகத்தான் இருக்கும் என நம்ப வேண்டாம். நீங்கள் ஒரு நிறுவனத்தின் எண்ணிற்கு அழைக்கும்போது உங்களிடம் பணம் தொடர்பாக ஏதாவது பேச்சு கொடுத்தால் உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்துவிடுவது நல்லது. எனவே இணையத்தில் காட்டப்படும் வாடிக்கையாளர் சேவை எங்கள் குறித்து இனி எச்சரிக்கையாகவே இருங்கள்.