சிரிப்பு போல அழுகையும் சட்டென்று வருவது தான். வருத்தம் அளித்தால், கண்ணில் புகைப்படிந்தால், வெங்காயம் நறுக்கும் போது கூட, கண்ணில் நீர் வடிவது உண்டு. அதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
நமது வாழ்நாளில் 25 கோடி தடவை அழுவதாக உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நமது கண்ணின் இமைகள் தோலின் மடிப்புகளாக அமைந்திருக்கின்றன. அந்த மடிப்புகள் நாடக மேடையின் திரைகளைப் போலவே இறங்குவதும் ஏறுவதுமாக உள்ளன. இதனால் நமது பார்வை பாதிக்கப்படுவதில்லை. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது கூட நமக்கு தெரியாது. நமது கண்ணின் இமைகள் நமது ஆயுள் முழுவதிலும் 6 வினாடிக்கு ஒருமுறை தாமாகவே திறந்து, மூடிக்கொள்வதில் ஈடுபடுகின்றன. இந்த இயக்கத்தை நடத்துவது தசைநார்களே!
ஒவ்வொரு கண்ணிலும் சுரப்பி உள்ளது. அது கண்ணின் வெளிப்புற மூலையின் மேலே இருக்கிறது. கண்ணின் மேல் இமைக்கு கண்ணீரைக் கொண்டு போக இழைமானங்கள் உள்ளன.
கண்ணின் முன்புறத்தில் இருந்து கண்ணீரைக் கொண்டு போவதற்கு கால்வாய்களும் இருக்கின்றன.
நாம் நமது கண்ணிமைகளை இமைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் கண்ணீரின் இழை மானங்களின் திறப்புகளிலிருந்து உறிஞ்சல் ஏற்பட்டு, அதில் ஒரு வகையான திரவம் வெளிப்படுகிறது. விழித்திரைக்கு நீர் பாய்ச்சவும், அது உலர்ந்து போகாமல் தடுக்கவும் நடைபெறும் இந்தச் செயல்முறை தான் நாம் அழும்போதும் நடைபெறுகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இதற்கும் அழுகைக்கும் வேற்றுமை இல்லை.
நாம் வரம்பு மீறிச் சிரிக்கும் போதும் கண்ணீர் வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான். இதற்கு காரணம் கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பிகளை தசைநார்கள் அழுத்துவதால் தான் கண்ணீர் வெளியே பெருகுகிறது.
வெங்காயம் நமக்கு கண்ணீரை உண்டு பண்ணுவதன் காரணம் வெங்காயம் விரைவில் ஆவியாக மாறும் தன்மை உள்ள ஒரு பொருளை வெளிப்படுத்துகிறது. அது நம்முடைய கண்களை அடையும் போது எரிச்சல் உணர்ச்சி ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே கண்ணீரைப் பெருக்குகிறது. எரிச்சலை உண்டு பண்ணும் கண்ணீர் பொருளை அகற்றி விடுகிறது.
புகை ஏற்படும் போதும் நமது கண்ணுக்கு எரிச்சல் ஏற்படாமல் இருப்பதற்காக கண்ணீர் விடுகிறோம்.
நமது உணர்ச்சிகள் சொற்களாக வெளிவராத நிலையில் என்ன ஏற்படுகிறது என்றால், அந்த உணர்ச்சிகள் கண்ணீரைத் தேக்கி வைத்துள்ள சுரப்பிகளில் நுழைகின்றன. நம்மை அறியாமலேயே இந்த நிகழ்ச்சி ஏற்படும்போது கண்ணீர் விடுகிறோம். இது நமது உணர்ச்சிகளை சொற்கள் மூலமாக வெளியிட முடியாத போது நமது உடல் கண்ணீரை விடுவிப்பதற்கு கண்டுபிடித்து வைத்திருக்கும் உபாயம் தான் இது. அதனால் தான் வருத்தம் ஏற்படும் போது அழுகின்றோம்.