வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

stars
stars
Published on

விண்வெளியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு புதிய புதிய அறிவியல் உண்மைகளை தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசய நிகழ்வுதான் சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நொடிக்கு 716 முறை சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரம். இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திரங்களில் இதுவே மிக வேகமாக சுழலும் நட்சத்திரமாகும். 

நியூட்ரான் நட்சத்திரம்: ஒரு நட்சத்திரம் தனது ஆயுட்காலம் முடிந்து, அணு எரிபொருள் எரிந்து தீர்ந்து போகும் போது, தன் சொந்த ஈர்ப்பு விசையால் சுருங்கி, மிகவும் அடர்த்தியான ஒரு பொருளாக மாறும். இதுவே நியூட்ரான் நட்சத்திரம் எனப்படும். சூரியனை விட பல மடங்கு நிறையுடைய ஒரு நட்சத்திரம், இவ்வாறு சுருங்கும் போது, ஒரு நகரின் அளவுக்கு சிறிதாகி விடும். அதாவது, ஒரு தேக்கரண்டி அளவு நியூட்ரான் நட்சத்திரப் பொருளின் நிறை, எவரெஸ்ட் மலையின் நிறைக்கு சமமாக இருக்கும்.

பைனரி நட்சத்திரம்: பைனரி நட்சத்திரம் என்றால், இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு, ஒரே மையத்தை சுற்றி வரும் ஒரு அமைப்பைச் சொல்லலாம். இந்த அமைப்பில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக இருக்கலாம் அல்லது தொலைவில் இருக்கலாம்.

இந்த அதிவேக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம், பைனரி சிஸ்டம் 4U 1820-30 இல் NGC 6624 என்ற குளோபுலர் கிளஸ்டருக்குள் உள்ளது. இந்த பைனரி நட்சத்திரமானது இது பூமியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நாசாவின் எக்ஸ்ரே தொலைநோக்கி NICER (Neutron Star Interior Composition Explorer) மூலமாகவே இந்த அதிவேக சுழற்சி கண்டுபிடிக்கப்பட்டது. NICER, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

அதிவேக சுழற்சியின் காரணங்கள்:

ஒரு நியூட்ரான் நட்சத்திரம் இவ்வளவு வேகமாக சுழல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, இது ஒரு பைனரி நட்சத்திரமாக இருப்பது. அதாவது, இதற்கு அருகில் ஒரு துணை நட்சத்திரம் இருக்கிறது. இந்த துணை நட்சத்திரத்திலிருந்து நியூட்ரான் நட்சத்திரம் சக்தியைப் பெற்று மேலும் வேகமாக சுழலும். இரண்டாவதாக, நியூட்ரான் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் அணுகுண்டு வெடிப்பது போன்ற சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்படுவதால், இது மேலும் வேகமாக சுழலக் காரணமாக இருக்கலாம். இந்த வெடிப்புகளின் போது, நியூட்ரான் நட்சத்திரம் சூரியனை விட 1,00,000 மடங்கு பிரகாசமாகி, அபரிமிதமான ஆற்றலை வெளியிடுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 8 மேற்கோள்கள் உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும்!
stars

இந்த கண்டுபிடிப்பு, நியூட்ரான் நட்சத்திரங்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியுள்ளது. நியூட்ரான் நட்சத்திரங்கள் மிகவும் அடர்த்தியான மற்றும் விரைவான சுழற்சியைக் கொண்டவை என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும், இவ்வளவு வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம் இருப்பதை இதுவரை நாம் கண்டறியவில்லை. இந்த கண்டுபிடிப்பு, நியூட்ரான் நட்சத்திரங்களின் தீவிர பண்புகள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com