மின்சார பயன்பாடு தற்போது தமிழகத்தில் டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் கணக்கிடப்படுகிறது. ரூ19,235 கோடியில் மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரப்பட்டு இருந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதி மின்வாரியம் திறக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. மின் பயன்பாட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் ஸ்மார்ட் மீட்டர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின் பயன்பாடு கணக்கீட்டில் வெளிப்படை தன்மையை மின்சார வாரியம் கடை பிடித்து வருவதால் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வர நினைக்கிறது. மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில், அனைத்து மின் இணைப்புகளிலும், 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் ரீடிங் எடுப்பதில் பல தவறுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, ஆளில்லாத மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் வண்ணம், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவானது. 93 வருடங்கள் ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அது தொடர்பானபணிகள் வேகம் எடுத்துள்ளன
ஸ்மார்ட் மீட்டர் பயன்கள்
தற்போது ஒரு மாதத்திற்கு ஒருமுறை சாதாரண மீட்டரில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி சாஃப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக சர்வரில் இணைக்கப்படும். இதனால் குறிப்பிட்ட தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டணத்தை அனுப்பி வைத்து விடும்.
4ஜி அலை வரிசையில் இயங்கும் வகையில் சிம் கார்டுகள், மின் கணக்கீட்டு புதிய சாப்ட்வேர்கள் போன்றவை பயன்படுத்தப்படுவதால் ஆள் இல்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. இதன் மூலம் வீடு வீடாக மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுக்க வேண்டிய வேலை இருக்காது. எஸ்.எம்.எஸ் மூலம் பில் நுகர்வோருக்கு சென்றுவிடும்.
இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சார திருட்டு, மின்விநியோகம் நிறுத்தம் போன்ற புகார்களை பதியலாம். இவ்வளவு சிறப்புகளை ஸ்மார்ட் மீட்டர் பெற்றுள்ளதால் பொதுமக்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.