சில்லரை விற்பனை மையங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்தது! ஆச்சரியத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்!

Smartphones
Smartphones

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்கள் தான் நம்மை அதிகமாக ஆள்கின்றன. முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு கைப்பேசி என்பதே அரிதான ஒன்று. ஆனால் இப்போது அப்படி இல்லை. பட்டன் வடிவிலான கைப்பேசிகள் எல்லாம் மறைந்து, அனைத்தும் ஸ்மார்ட்போன்களாக மாறி விட்டது. இன்று ஒரு வீட்டிற்கு குறைந்தது 4 ஸ்மார்ட்போன்களாவது இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, மக்களுக்கு அனைத்து சேவைகளும் அதிலேயே மிக எளிதில் கிடைத்து விடுகின்றன. பொதுமக்கள் மளிகைச் சாமான் முதல் பூஜை சாமான்கள் வரை அனைத்தையும் கடைகளுக்குச் சென்று வாங்கினார்கள். ஆனால், இன்று அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.

அவ்வளவு ஏன்? புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றால் கூட ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர்‌. இதற்காக வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர்களை அள்ளி விடுகின்றனர் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட நேரடியாக கடைகளுக்குச் சென்று ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ஆன்லைன் வர்த்தகத் தளங்களைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், இப்போது மீண்டும் நேரடியாக கடைகளை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். இதனால் உள்நாட்டு வர்த்தகம் பெருகும் என கூறப்படுகிறது. சில்லரை விற்பனைக் கடைகளில் கடந்து முடிந்த காலாண்டில் மட்டும், ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்திருப்பதாக “கவுன்டர் பாயின்ட்” ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனைக் கடைகளில் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில், விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விகிதம் 56% ஆகும். இது மார்ச் காலாண்டில், 61% ஆக அதிகரித்துள்ளது. மீதமிருக்கும் 39% ஸ்மார்ட்போன்கள் விற்பனையில், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் அதிகம் பங்கு வகிக்கின்றன.

விவோ மற்றும் சாம்சங் மொபைல் நிறுவனங்கள், நாட்டில் அதிகளவிலான சில்லரை விற்பனைக் கடைகளைக் கொண்டுள்ளன. ஆன்லைனில் மட்டும் அதிகம் விற்பனையாகும் ஒன்பிளஸ், போகோ மற்றும் ரியல்மி போன்ற மொபைல் நிறுவனங்களும் நடப்பாண்டு மார்ச் காலாண்டில், தங்கள் நேரடி விற்பனைக் கடைகளை விரிவுபடுத்தி உள்ளன. இது ஆன்லைன் வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 
Smartphones

விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன்னதாக அதனைத் தொட்டு, உணர விருப்பம் கொள்கின்றனர். இதன் காரணமாகத் தான், சில்லரை விற்பனைக் கடைகளில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் விலையைக் குறைத்து பேசுவதற்கான வாய்ப்பு மற்றும் வட்டியில்லா மாதத் தவணை வசதி போன்ற காரணங்களும் நேரடி விற்பனைக்கு உதவுவதாகக் கூறுகிறார்கள்.

ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து கவுன்டர் பாயின்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஷில்பி ஜெயின் கூறியதாவது, "கடந்த சில காலாண்டுகளாக சில்லரை விற்பனைக் கடைகள், ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கான முக்கிய மையங்களாக உள்ளன. பொதுவாக ஆன்லைன் வர்த்தகத் தளங்களில், பண்டிகை காலங்களில் தான் விற்பனை அதிகரிக்கிறது. அச்சமயங்களில் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் விற்பனையை அதிகரிக்க ஆஃபர்களை அறிவிப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com