மோப்பம் பிடிக்கும் ரோபோட்.

மோப்பம் பிடிக்கும் ரோபோட்.

ற்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (-AI-) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பல அறிவியல் துறைகளில் இதை தற்போது  பயன்படுத்தி, பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். பல விதமான புதிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வரிசையில் மோப்ப சக்தியுடைய ரோபோவை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். 

பார்ப்பதற்கே மிகவும் அழகாக, நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோ, இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் (Del Aviv) என்ற பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பாகும். இந்த ரோபோ, வெட்டுக்கிளியை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளின் தலையில் இருக்கும் மீசை போன்ற இரண்டு கொம்புகள், எதிரே இருக்கும் விஷயத்தை நுண்ணறிய எப்படிப்  பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோல இந்த ரோபோவின் தலையில் பொருத்தப் பட்டிருக்கும் உணர்கருவிகள் மோப்பம் பிடிக்கப் பயன்படுகிறது. 

இந்த ரோபோக்களைப் பாதுகாப்பு பயன்பாட்டிற்கும், நோய்களைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். பயோ டெக்னாலஜி முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள், பயோ ஹைபிரிட் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் உணர் கருவிகள் வழியாக வாசனைகளை எலக்ட்ரோடு சிக்னல்களாக மாற்றி, எதிரே இருப்பது என்ன பொருள் என்பதையும் அல்லது எவ்வகையான நோய்த்தொற்று கொண்டது என்பதையும் கண்டுபிடிக்குமாம். இது முழுக்க முழுக்க ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI)  மூலம் செயல்படும் ரோபோ என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். 

இதில் உணர்கருவிகளாக உண்மையான வெட்டுக் கிளியின் ஆண்டனாவைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆண்டனாக்களை இரண்டு எலக்ட்ரோடுகளுக்கு மத்தியில் வைக்கும்போது, உணரப்படும் வாசனையானது எலக்ட்ரோடு சிக்னல்களாக மாற்றப்படுகிறது. பின்னர் கிடைத்த சிக்னலை கொண்டு, மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் வாயிலாக, அது எவ்வகையான வாசனை என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த ரோபோ, எவ்வகையான வாசனையாக இருந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுமாம். 

இதைப் பயன்படுத்தி, விண்வெளியில் கூட வாசனைகளை வேறுபடுத்தி எதிரே இருப்பது எவ்வகையான பொருள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று, சாகுல் ஸ்கூல் ஆஃப் நியூரோ சயின்ஸ்-ஐ சேர்ந்த நேத்தா சிவில் கூறியுள்ளார். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, எப்படி விலங்குகள் மோப்பம் பிடிப்பதன் மூலமாகவே நோய்களைக் கண்டுபிடிக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். 

எதிர்காலத்தில் இதனுடைய பயன்பாடு நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த ரோபோவை உணவு பாதுகாப்பு, போதைப் பொருள் மற்றும் வெடி பொருட்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தலாம். 

ஏற்கனவே AI தொழில்நுட்பம் பல்லாயிரக்கணக்கான மக்களின் வேலையைப் பறிக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மோப்பம் பிடிக்கும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்தால், மோப்ப நாய்களின் வேலையும் அம்பேல்தான் போல?. இருப்பினும் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதானே?! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com