

சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை பார்க்கலாமா? கூடாதா? என்று பல்வேறு விதமான கேள்விகளை டிவியில் அந்த கிரகணம் ஏற்படும் நாளில் கேட்பவர்களைப் பார்க்கலாம். அதற்குப் பதில் கூறும் அவர்கள் பார்க்கக் கூடாது என்று கூறுவதன் காரணம் என்ன? என்பதையும், சூரிய, சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
சந்திர கிரகணம் ஏற்படுவது:
நாம் வெயிலில் நின்றால் கீழே நிழல் விழுகிறது. காலை சுமார் எட்டு மணி அளவில் நாம் வெயிலில் நின்றால் நம்முடைய நிழல் அருகில் உள்ள சுவரில் தெளிவாக விழுவதைக் காணலாம். நாம் சூரியனுக்கும் சுவருக்கும் நடுவே நிற்கிறோம் என்றால் அதன் காரணமாக நம் நிழல் சுவர் மீது விழுகிறது.
சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி அமைந்துள்ளதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதையே நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம்.
சந்திர கிரகணத்தன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த வரிசையில் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. இப்படி அமையும் போது தான் சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி அன்று தான் இந்த மூன்றும் இந்த வரிசையில் அமைந்திருக்கும். தெளிவாக கூறினால் பௌர்ணமி அன்று அதாவது முழு நிலவு நாளில் தான் சந்திர கிரகணம் ஏற்படும்.
ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சந்திர கிரகணம் ஏற்படுவது இல்லை. அதற்குக் காரணம், பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்பதுதான். அதே சமயம், சந்திரனின் சுற்றுப்பாதை ஒரே சீராக இருப்பதில்லை. சூரியனையும் பூமியையும் சேர்த்து நேர்க்கோடு வரைவதாக வைத்துக் கொள்வோம். பெரும்பாலான பௌர்ணமிகளில் சந்திரன் இந்த நேர் கோட்டுக்கு சற்று மேலேயோ அல்லது கீழேயோ உள்ளது.
சந்திரன் மிகச்சரியாக அந்த நேர்கோட்டில் அமைந்திருந்தால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த நேர்கோடும் சந்திரனின் பாதையும் சந்திக்கும் புள்ளியை சந்திரன் எப்படி கடக்கிறது என்பதை பொறுத்து சந்திர கிரகணம் முழு கிரகணமாக இருக்கலாம் அல்லது குறைச் சந்திர கிரகணமாக இருக்கலாம். சந்திரனின் சுற்றுப் பாதை பெரும்பாலும் சாய்வாக உள்ளது.
சூரிய கிரகணம் என்றால் என்ன? அதைப் பார்க்கக் கூடாது என்கிறார்களே ஏன்?
நிலா தன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வர நேர்ந்தால் சில நிமிடங்களுக்கு சூரியனின் ஒளியை மறைக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். நிலா சூரியனை மறைத்தாலும் சூரியனை விட சிறியதுதான். அதனால் முழுமையாக மறைக்க முடியாமல் மோதிரம் போன்ற தோற்றத்தில் சூரிய ஒளியின் வெளிப்புற வட்டம் மட்டுமே தெரியும்.
இந்த ஒளி வழக்கமாக வந்தடையும் ஒளியை விட அதிக பிரகாசமாகவும், அதிக திரியக்கத்தோடும் இருக்கும். நாம் வெறும் கண்களால் இந்த ஒளியை பார்க்க நேர்ந்தால் நிரந்தர பார்வை குறைபாடுகள் ஏற்படும். முழு சூரிய கிரகணத்தை விட பகுதி நேர சூரிய கிரகணத்தில் இந்த குறைபாடுகள் அதிகம். அதனால்தான் சூரிய கிரகணத்தை பார்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.