
விண்வெளிப் பயணத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்க எலான் மஸ்க் தலைமையிலான SpaceX நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை முயற்சிகளில் அவ்வப்போது பின்னடைவுகளை சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எட்டாவது சோதனைப் பயணமும் எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்தது விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், ஏவிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தால் புளோரிடா மற்றும் பஹாமாஸ் தீவுகளின் சில பகுதிகளில் ராக்கெட் பாகங்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இதேபோன்ற ஒரு தோல்வி நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் ஸ்டார்ஷிப் திட்டத்திற்கு இது இரண்டாவது தொடர்ச்சியான விபத்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து நிகழ்ந்தவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டது அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம். விண்வெளியில் இருந்து சிதறிய பாகங்கள் காரணமாக புளோரிடா மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெக்சாஸில் உள்ள SpaceX ஏவுதளத்தில் இருந்து மார்ச் 6ஆம் தேதி மாலை ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட்டின் முதல் பாகம், பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிரேன் மூலம் அது பத்திரமாக வானில் பிடிக்கப்பட்டது. ஆனால், ஸ்டார்ஷிப் விண்கலத்துடனான தகவல் தொடர்பு ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே துண்டிக்கப்பட்டது.
SpaceX நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி, ஸ்டார்ஷிப் விண்கலம் பின்புறத்தில் "சக்தி வாய்ந்த நிகழ்வை" சந்தித்ததாகவும், சில இயந்திரங்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விண்கலத்துடனான கட்டுப்பாடு முற்றிலும் இழக்கப்பட்டு, தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஏவப்பட்ட சுமார் ஒன்பது நிமிடங்கள் மற்றும் முப்பது வினாடிகளுக்குப் பிறகு விண்கலத்துடனான கடைசி தொடர்பு ஏற்பட்டது.
வெடிப்பு ஏற்பட்ட போதிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்த ராக்கெட் பாகங்களில் நச்சுப் பொருட்கள் எதுவும் இல்லை என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த விபத்து ஒரு பின்னடைவாக இருந்தாலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரக பயணத்திற்கான தனது லட்சியத்தை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.