
மதுரையின் மண்வாசனையில் பிறந்து, இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகிள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆகிய இரண்டிற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்து நிற்கும் சுந்தர் பிச்சை, தமிழர்களின் திறமைக்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டு.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, கடின உழைப்பாலும் தொடர் முயற்சியாலும் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சென்னை பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, ஐஐடி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற அவர், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றார். ஆரம்பத்தில் மெக்கின்சி போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 2004 இல் கூகிளில் இணைந்தார்.
கூகிளில் சேர்ந்த பிறகு, குரோம் உலவி, குரோம் ஓஎஸ், கூகிள் டிரைவ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என கூகிளின் முக்கியப் தயாரிப்புகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். இவரது திறமையைக் கண்டறிந்து, 2015 ஆகஸ்டில் கூகிளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், கூகிளைத் தோற்றுவித்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஆல்பாபெட் தலைவர் பொறுப்புகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கூகிள் மற்றும் ஆல்பாபெட் இரண்டிற்கும் தலைமை தாங்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் உலகத் தொழில்நுட்பத் துறையின் உச்சபட்ச பொறுப்புகளில் ஒருவரானார் சுந்தர் பிச்சை.
இந்நிலையில், ஆல்பாபெட் நிறுவனம் சமீபத்தில் சமர்ப்பித்த ஒரு அறிக்கையில் சுந்தர் பிச்சையின் வருமானம் மற்றும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின்படி, சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டுக்கான ஊதியம் சுமார் ரூ.91 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கான தனிப்பட்ட பாதுகாப்புச் செலவுகள் இந்த ஊதியத்தில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக மட்டும் ஆல்பாபெட் நிறுவனம் சுமார் 8.27 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.68.90 கோடியைச் செலவிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டான 2023 இல் செலவிடப்பட்ட 6.78 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.57.48 கோடி) தொகையை விட 22% அதிகம் ஆகும். இந்தப் பாதுகாப்புச் செலவுகளில் அவரது இல்லப் பாதுகாப்பு, ஆலோசனைகள், கண்காணிப்பு அமைப்புகள், பயணம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும் எனக் கூறப்படுகிறது.
நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளின் பாதுகாப்பிற்காகச் செலவிடுவது வழக்கமான நடைமுறை என்றாலும், சுந்தர் பிச்சைக்கான பாதுகாப்புச் செலவு கடந்த ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிர, கூகிளின் தலைமைச் சட்ட அதிகாரி கென்ட் வாக்கரின் மொத்த ஊதியம் 2024 இல் 30.2 மில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.256.2 கோடி) இருந்துள்ளது.
தொழில்நுட்ப உலகின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கான பணியின் தன்மை, வருமானம் மற்றும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் அளவு குறித்த இந்த விவரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.