

- மரு க இராவணன்
வியர்வை என்பது வெறும் உடலின் வெப்பத்தைத் தணிக்கும் இயற்கை அமைப்பு மட்டுமல்ல, அது நம் உடல் நலம், வளர்சிதை மாற்றம், உணவுப் பழக்கம், மனநிலை மற்றும் சில நோய்களைப் பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்தும் உயிரியல் “தகவல் பெட்டகம்” என்று சொல்வது சாலப் பொருந்தும்.
உண்மை என்னவென்றால், புதிதாகச் சுரக்கும் வியர்வைக்கு கிட்டத்தட்ட எந்த நாற்றமும் இருப்பதில்லை. நாம் உணரும் உடல் நாற்றம், தோலின் மேற்பரப்பில் இயல்பாக வாழும் Corynebacterium மற்றும் Staphylococcus போன்ற பாக்டீரியாக்கள் வியர்வையில் உள்ள புரதங்கள் மற்றும் கொழுப்புச் சத்துக்களை உடைத்து, ஆவியாகும் வேதிப்பொருட்களை உருவாக்குவதால்தான் ஏற்படுகிறது. மேலும், ஒவ்வொரு மனிதரின் தோல் நுண்ணுயிர் அமைப்பும் தனித்துவமானது என்பதால், ஒவ்வொரு வருக்கும் தனித்துவமான உடல் மணம் உருவாகிறது.
இது விரல் ரேகையைப் போலவே ஒருவரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்தும் ஒரு உயிரியல் அடையாளமாகக் கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களை மோப்பம் பிடித்து தனக்கு பழகியவர் அல்லது புதியவர் என்று பிரித்தறிவது இதனால்தான்.
நமது உடலில் இரண்டு முக்கிய வகையான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.
1. உடல் முழுவதும் பரவியுள்ள எக்கிரைன் (Eccrine) சுரப்பிகள் பெரும்பாலும் தண்ணீர் மற்றும் உப்புகளைச் சுரந்து உடல் வெப்பத்தைக் குறைக்க உதவுகின்றன.
2. அக்குள், இடுப்பு, மார்பகக் காம்புகளைச் சுற்றிய பகுதிகளில் அதிகமாக உள்ள அபோகிரைன் (Apocrine) சுரப்பிகள் பருவ வயதிற்குப் பிறகே முழுமையாகச் செயல்படத் தொடங்குகின்றன. இவை புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த தடிமனான சுரப்பை வெளியிடுவதால், பாக்டீரியாக்கள் அவற்றைச் சிதைத்து கடுமையான நாற்றத்தை உருவாக்குகின்றன. உடற்பயிற்சியால் ஏற்படும் வியர்வையை விட மனஅழுத்தம், பயம், பதட்டம் போன்ற உணர்ச்சிகளால் சுரக்கும் வியர்வை அதிக நாற்றமுடையதாக இருப்பதற்கும் இதுவே காரணம்.
வியர்வையின் மணம் சில நேரங்களில் உடலில் மறைந்திருக்கும் நோய்களின் எச்சரிக்கைச் சின்னமாகவும் அமைகிறது.
1. பழம் அல்லது நகப் பூச்சு கரைப்பான் போன்ற இனிப்பான மணம் வீசினால், அது உயிருக்கு ஆபத்தான நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (Diabetic Ketoacidosis) என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
2. அம்மோனியா போன்ற மணம் நீரிழப்பு, நீண்ட நேர உண்ணாவிரதம் அல்லது சிறுநீரக நோய்களில் காணப்படலாம்.
3. அழுகிய மீன் போன்ற நாற்றம் டிரைமெதிலமினூரியா (Trimethylaminuria) எனப்படும் அரிய பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறைக் குறிக்கலாம்.
4. ப்ளீச்சிங் பவுடர் போன்ற மணம் சில கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்களில் தோன்றக்கூடும்.
5. மது அருந்துதல், புகைப்பிடித்தல், பூண்டு, வெங்காயம், சில மசாலா உணவுகள், சில மருந்துகள் மற்றும் சில தொற்றுநோய்களும் உடல் மணத்தை மாற்றக்கூடியவை.
வியர்வை என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் தாதுக்கள்,, நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், ஹார்மோன்களின் சுவடுகள் மற்றும் வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்கள் மிகச் சிறிய அளவில் காணப் படுகின்றன. இதன் அடிப்படையில், இரத்தம் எடுக்காமல் வியர்வையிலேயே குளுக்கோஸ், சோடியம், லாக்டேட், கார்டிசோல் (Cortisol) போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் மற்றும் சில மருந்துகளின் அளவுகளைக் கூட அளவிடும் அணியக்கூடிய (Wearable) மின்னணு சென்சார்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்கால மருத்துவத்தில் இவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் மணம் எல்லா நேரங்களிலும் தீமையானதல்ல. தாய் தனது பிறந்த குழந்தையை சில நாட்களிலேயே அதன் இயல்பான மணத்தின் மூலம் அடையாளம் காண முடியும். அதேபோல் குழந்தையும் தாயின் மணத்தை உணர்ந்து அமைதியடைகிறது. எனவே உடல் மணம் மனித உறவுகள், பாசப்பிணைப்பு மற்றும் இனப்பெருக்கத் தேர்விலும் நுண்ணிய பங்காற்றுகிறது.
உடல் நாற்றத்தைக் கட்டுப்படுத்த தினசரி குளித்தல், தோலை நன்கு உலர்த்துதல், பருத்தி போன்ற காற்றோட்டமான ஆடைகளை அணிதல், காலுறைகளை அடிக்கடி மாற்றுதல், அக்குள் முடியை நீக்குதல், ஆன்டிபர்ஸ்பிரன்ட் (Antiperspirant) அல்லது டியோடரண்ட் (Deodorant) பயன்படுத்துதல் போன்றவை பயனளிக்கின்றன. இருப்பினும் திடீரென தோன்றும் அல்லது வழக்கத்திற்கு மாறாக கடுமையான உடல் நாற்றத்தை அலட்சியப்படுத்தக் கூடாது.
அது சில சமயங்களில் நீரிழிவு, கல்லீரல் நோய், சிறுநீரக நோய் அல்லது அரிய வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
அதிக வியர்வை (ஹைப்பர்ஹைட்ரோசிஸ் – Hyperhidrosis) உள்ளவர்களுக்கு சிறப்பு மருந்துகள், அதிக வலிமையுள்ள போடுலினம் டாக்சின் (Botulinum toxin) ஊசிகள் மற்றும் பிற சிகிச்சை முறைகள் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துகின்றன.
எனவே, வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், நாம் “வியர்வை நாற்றம்” என்று நினைப்பது உண்மையில் வியர்வையின் நாற்றமல்ல. நம் தோலில் இயல்பாக வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உருவாக்கும் வேதியியல் மணம்தான் அது. அதே நேரத்தில், அந்த மணமே ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான உயிரியல் அடையாளமாகவும், உடல் நலத்தை வெளிப்படுத்தும் பிரத்யேக மொழியாகவும் விளங்குகிறது.
உடலின் கழிவாக மட்டுமே பார்க்கப்படும் வியர்வையை, உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஒரு கருவியாக மாற்ற இந்தத் தொகுப்பு உதவுகிறது. உங்கள் வியர்வையின் வாசனையில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டே கல்லீரல், சிறுநீரகம் அல்லது நீரிழிவு போன்ற மறைமுக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த மருத்துவச் சிகிச்சையைத் தாமதமின்றிப் பெற இது வழிகாட்டுகிறது.