
சிறுவயதில் படித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் வரும் திருடர்கள் தங்களுடைய செல்வங்களையெல்லாம் ஒரு குகையில் ஒளித்துவைத்திருப்பார்கள். அந்தக் குகையின் கதவுக்குப் பூட்டு, சாவி கிடையாது. ஒரு குறிப்பிட்ட சொற்றொடரைச் சொன்னதும் அது தானாகத் திறந்துகொள்ளும்.
ஆனால், இது அவ்வளவு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு இல்லை. அந்தத் திருடர்கள் சத்தமாகச் சொல்லும் சொற்றொடரை அலிபாபா கேட்டுவிடுவார், அதைப் பயன்படுத்திக் குகைக்குள் நுழைந்துவிடுவார். பூட்டு சாவியெல்லாம் அப்போது ஏது?
அதனால், நாம் நம்முடைய வீடுகள், கடைகள், அலுவலகங்களின் கதவுகளைப் பூட்டு, சாவி கொண்டு பாதுகாக்கிறோம். இதிலும் சிறு ஆபத்து உண்டு. யாராவது போலிச் சாவி தயாரித்துவிட்டால் வம்புதான்.
இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்குத் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. அதாவது, 'பூட்டைத் திறப்பதற்குச் சாவி என்ற திறவுகோல் வேண்டாம், வேறு வழிகளில் உங்களை நிரூபித்து உள்ளே வாருங்கள்' என்கிறது.
எடுத்துக்காட்டாக, இன்றைக்குப் பல அலுவலகங்களில் Finger Print Scanner எனப்படும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. அந்த அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள் இந்த ஸ்கேனரில் தங்களுடைய விரலை வைத்து அழுத்தினால் போதும். அது தன்னிடம் இருக்கும் தரவுத்தளத்தில் (database) அந்தக் கைரேகை இருக்கிறதா என்று தேடிப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு கதவைத் திறக்கிறது. இல்லாவிட்டால், 'நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கதவைத் திறக்கமாட்டேன்' என்று மறுத்துவிடுகிறது.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நுழைவாயில் கதவுமட்டுமின்றி அலுவலகத்துக்குள் இருக்கும் ஒவ்வோர் அறையையும் இவ்வாறே கட்டுப்படுத்தலாம். உரிய நபர்களுக்கு உரிய இடங்களில் மட்டும் அனுமதி வழங்கலாம். எடுத்துக்காட்டாக, பொதுவான அறைகளுக்குள் எல்லாரும் நுழையலாம், ஆனால், ரகசிய ஆராய்ச்சிகள் நடைபெறும் அறைக்குள் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் நுழையமுடியும்.
இங்கு கைரேகைக்குப் பதில் முகத்தையும் பயன்படுத்தலாம். உங்களுடைய செல்பேசியில் உள்ள Face Recognition தொழில்நுட்பம்தான் இங்கும் பயன்படுகிறது. முகத்தைப் பார்த்துத் தரவுத்தளத்தில் ஒப்பிட்டுக் கதவைத் திறக்கிறது, அல்லது, மறுக்கிறது.