இந்தியாவின் மங்கள்யான், தொழிலதிபர் எலன் மஸ்கின் (Elon Musk) ஸ்டார்ஷிப் (Starship) என்று பல பெயர்களைச் செவ்வாய் கிரகத்தை நோக்கமாக கொண்டு செயல்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம். இதெல்லாம் எதற்காக நடந்துகொண்டிருக்கிறது? நமக்கு என்ன பயன் இதில்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்...
மனிதனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
செவ்வாய் கிரகத்தைப் பற்றிய கற்றல் பல தசாப்தங்களாக மனித சமுதாயத்தில் இருக்கிறது. இந்தச் சிவப்பு கிரகத்தில் மனிதர்களை எப்படியாவது குடியேற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு கனவுதான், இன்று உலகம் முழுக்க எல்லா விஞ்ஞானிகளும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
இதற்கான முதன்மையான காரணம் பூமியில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும் சிறுகோள் தாக்கங்கள் (Asteroid impacts) அல்லது மனிதர்களால் ஏற்படும் அணுசக்தி போர்கள் (Nuclear wars) போன்ற பேரழிவு நிகழ்வுகள்தான். இந்தப் பேரழிவுகளால் மனித சமுதாயம் அழிந்தால் செவ்வாய் கிரகத்திலாவது மனித சமுதாயம் தொடர வேண்டும் என்ற முதன்மையான காரணமே.
கூடுதலாக, செவ்வாய் கிரகம் அறிவியல் ஆய்வுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நமது சூரிய மண்டலத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய புதுபுது நுண்ணறிவுகளை இதனால் பெறமுடிகிறது. அதுபோல தேவைப்பட்டால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தின் வளங்களால் பல பொருளாதார நன்மைகளும் ஏற்படக்கூடும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் இதில் உள்ளது.
மனிதன் கால் பதிப்பதற்கு முன் என்னென்ன நடக்க இருக்கின்றன?
இப்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செவ்வாய் கிரக ஆய்வை மேலும் சாத்தியமாகியுள்ளன. நாசா (NASA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான Mars Sample Return (MSR) திட்டமானது செவ்வாய் கிரகத்தின் முழு விவரத்தை ஆராய அதன் நில மாதிரிகளை (Martian samples) பூமிக்கு தானியங்கியாக (Robotic) கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்காக நாசாவால் 2018 ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட பெர்ஸெவரன்ஸ் ரோவர் (Perseverance rover) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை ஏற்கனவே சேகரித்து வைத்துள்ளது. இந்த மாதிரிகள் அந்த ரோவரின் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (containers) சேமிக்கப்பட்டு எதிர்காலத்தில் இந்த Mars Sample Return திட்டத்தில் பூமிக்குக் கொண்டுவரப்படும். அதற்காக Mars Ascent Vehicle (MAV) என்னும் சிறிய ராக்கெட் செவ்வாய் கிரக மாதிரிகளை சுமந்து அதன் சுற்றுப்பாதைக்கு (Mars orbit) கொண்டுவந்து விண்வெளியில் சுற்றும் (Earth Return Orbiter) மூலம் பூமிக்கு கொண்டு வரப்படும். இது முழுக்க முழுக்க ரோபோடிக் (Automated) வேலைப்பாடுகளால் நடக்கக்கூடியது.
சாமானிய மக்களுக்கு இதில் என்ன பயன்?
அறிவியலில் இருந்து அப்பாற்பட்டவர்களுக்கு இதிலுள்ள செலவுகள்தான் முதலில் கண்ணில்படும். ஆனால் அது மட்டும் இல்லை. காரணம் இன்றைய உலகமே அறிவியலின் முன்னேற்றத்தால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நாமும் அதனுடன் பழகிவிட்டோம். அது போல இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளும் பல குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஈர்த்து இதை பற்றிய புரிதலை விரிவடைய செய்கிறது. காலப்போக்கில் இதனால் பல புது கண்டுபிடிப்புகளை வரச்செய்து மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகள் நடக்க வைக்கக்கூடும். இதுபோன்ற மனிதகுலத்திற்கான ஆராய்ச்சிகள்தான் பல மக்களை மதம் வேறுபாடின்றி, மொழி தடையின்றி, நாடுகள் வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றுசேர்த்து ‘மனித குலத்தின் நலன்‘ என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட வைக்கிறது.