இன்றைய தலைமுறையினரை ஆட்டிவைக்கும் ஸ்மார்ட் போன்களின் 'தாத்தா'வுக்கு வயது 30!

Smartphone
Smartphone
Published on

இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் மூழ்கி கிடைக்கும் ஸ்மார்ட் போனுக்கு வயது 30 என்றால் நம்புவீர்களா..?

உண்மைதான், ஸ்மார்ட் போன்களுக்கு 30 வயது ஆகிவிட்டதன் அடையாளம்தான் ‘ஐ.பி.எம். சைமன்’ (IBM Simon Personal Communicator) என்கிற இந்த பழங்காலத்து ஸ்மார்ட்போன். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தொடுதிரை, ஆப்ஸ், இ-மெயில் என எல்லா வசதிகளையும் கொண்டிருந்த இந்த போன், விற்பனைக்கு வந்த ஆண்டு 1994.

ஐ.பி.எம் மற்றும் அமெரிக்க செல்லுலார் நிறுவனமான பெல்செப் இணைந்து தயாரித்த இந்த போனின், நீளம் 23 சென்டிமீட்டரும் அரை கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இந்த போன் கிட்டத்தட்ட ஒரு செங்கல்லில் பாதி அளவு கொண்டதாக இருந்தது. இதிலிருக்கும் பச்சை நிற எல்.சி.டி தொடுதிரை மூலம், தேவையான குறிப்புகளை தட்டச்சு செய்து சேமிக்கலாம். படம் கூட வரையலாம்.

தொடர்பு எண்கள், காலண்டர் என அத்தியாவசிய வசதிகள் மட்டுமின்றி, இந்த போன் மூலம் பேக்ஸ் அனுப்பவும், தகவல் பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. கையெழுத்தை உணரும் திறன் உள்ளதால் இதில் தட்டச்சு செய்யாமல் விரலால் எழுதியே எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம்.

புதிதாக ஆப்களையும், வீடியோ கேம்களையும் இணைத்துக்கொள்ள இந்த போனின் பின் பக்கம் ஒரு ஸ்லாட் இருந்திருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 1 மணி நேரம் வரை பேசக் கூடிய சக்தி வாய்ந்த (அந்தக் காலத்தில்!) பேட்டரி இதில் இணைக்கப்பட்டிருந்தது. இப்படி சகல வசதிகளையும் கொண்டிருந்த ஐ.பி.எம் சைமன் போன், 1994-ம் ஆண்டிலேயே சுமார் ரூ.54,000க்கு விற்கப்பட்டது. கொஞ்சம் அதிக விலை என்றாலும், அப்போதைக்கு புதிய டெக்னாலஜி என்பதால் பலரும் வாங்கி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இனி Google Maps-இல் காற்றின் தரத்தைக் கூட கண்காணிக்கலாம்… செம அப்டேட்! 
Smartphone

உலகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் இந்த போனை வாங்கி ஆவலோடு பயன்படுத்தினார்கள். கடந்த ஆகஸ்டு 16-ம் தேதி இந்த போனுடைய 30-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள் லண்டன் சயின்ஸ் மியூசியத்தைச் சேர்ந்தவர்கள். ‘ஸ்மார்ட் போன்களின் தாத்தா’ என்ற பெருமையோடு இது அவர்களின் கண்காட்சியை அலங்கரிக்கப் போகிறதாம்!

2007-ல் ஆப்பிள் நிறுவனம், ஐ-போன் தயாரித்தபோதுதான் ஸ்மார்ட் போன் என்ற கான்செப்ட் உருவானதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், பார்த்தால் தற்போது உள்ள எல்லாவிதமான புது டெக்னாலஜிகளும், பழையதின் காப்பிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com