
இன்றைய சூழலில் தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வில் அவசியமான ஒன்றாகிவிட்டது. அது இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை. அன்றாட வழக்கங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பல வேலைகளை விரைவாகவும், தவறுகள் இல்லாமல் செய்ய முடிகிறது. இது பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. டிஜிட்டல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செயல்பாட்டு செலவுகளை குறைக்க முடிகிறது.
தொழில்நுட்பத்தின் நன்மைகள் பலப் பல. தொழில்நுட்பம் நம் வாழ்வில் பல வேலைகளை எளிதாக்கியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேமெண்ட் போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடிகிறது.
தகவல் தொடர்பு:
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை உலகெங்கிலும் உள்ளவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், வீடியோ கான்பரன்சிங் சந்திப்புகள் போன்றவை சிறந்த தகவல் தொடர்புகளை வழங்குகின்றன.
மக்கள் தொலைவில் இருந்தாலும் கூட ஒன்றாக வேலை செய்ய இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வீடியோ கான்ஃபரன்சிங், திட்ட மேலாண்மை மென்பொருள் போன்ற தகவல் தொடர்பு கருவிகளை வழங்குவதன் மூலம் குழுக்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், உடனுக்குடன் நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கவும், குழுக்களாக இணைந்து ஒன்றாக வேலை செய்யவும் உதவுகிறது.
மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள்:
தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் நிறைய முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நோய்களைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும், வரும் முன்னர் காப்பதற்கும், தடுப்பதற்கும் பெரும் உதவியாக உள்ளது. மருத்துவ சாதனங்கள், மென்பொருட்கள் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் ஆகியவை சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்:
தொழில்நுட்பம் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், கிராஃபிக் டிசைனிங் போன்ற பல துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளன.
கற்றலை எளிதாக்குகிறது:
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கற்றலையும், கற்பித்தலையும் எளிதாக்குகிறது. ஆன்லைன் படிப்புகளும், வகுப்புகளும், மாணவர்கள் தங்களுடைய வீட்டுப் பாடங்களை செய்வதற்கும், தேவையான தகவல்களை பெறுவதற்கும் இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:
தொழில்நுட்பம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், புதிய தொழில்களை உருவாக்கவும் உதவுகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மின்னணு வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைகள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தொழில்நுட்பத்தின் எதிர்காலம்:
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தானியங்கிமயமாக்கல் வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். பல வேலைகள் தானியங்கிமயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வு தொடர்பான தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஆனால் அதே சமயம் சில சவால்களையும், பாதகமான விளைவுகளையும் கொண்டுள்ளது. இவை தனிமை மற்றும் சமூக விலகலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மன அழுத்தத்தை அதிகரிக்கும். அத்துடன் இவை தவறான கைகளில் சென்றால் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனுபவிப்பதுடன் அதன் பாதகமான விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.