
சமீபகாலமாகவே ஸ்மார்ட் வாட்ச்கள் பல நேரங்களில் உயிர்காக்கும் உபகரணமாக செயல்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் இசிஜி, இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்று பல விஷயங்களை நாம் அறியலாம். இதனால் இதைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தை அவ்வப்போது அறிந்து அவர்களைக் காப்பாற்ற இது உதவுகிறது.
ஹாக்கி வேல்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயது பால் வேப்பம் என்பவர், இவரது வீட்டின் அருகே நேற்று காலை ஓட்டப்பயிற்சி செய்கையில் மார்பு பகுதியில் அதிகப்படியான வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், கையில் இருந்த ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தனது மனைவியை அழைத்துள்ளார். இதனால் விரைவாக அந்த இடத்திற்கு வந்த அவரது மனைவி, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். தமனியில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், " நான் காலை 7 மணிக்கு எப்போதும் வழக்கம் போல நடைப்பயிற்சி சென்றேன். நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எனது மார்பில் அதிக வலி ஏற்பட்டது. மார்பு பகுதி மிகவும் இறுக்கமாக இருந்தது. சாலையிலேயே கை கால்களை ஊன்றி சரிந்து விழுந்தேன். எனது நெஞ்சை யாரோ பிழிவது போல் இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் கையில் ஸ்மார்ட் வாட்ச் இருந்ததால் அதைப் பயன்படுத்தி உடனடியாக என் மனைவிக்கு போன் செய்தேன்.
இதனால் உடனடியாக நான் இருந்த இடத்திற்கு வந்த என் மனைவி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு என் உயிரைக் காப்பாற்றினர். நான் கட்டுக்கோப்பாக இருப்பதால் எனக்கு மாரடைப்பு எல்லாம் வராது என நம்பினேன். ஆனால் எனக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவே உள்ளது. ஆனால் என் உயிரை ஒரு ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றியுள்ளது என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது" என அவர் கூறினார்.
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என நாம் கூறினாலும், இது போன்ற தருணங்களில் இவை நமக்கு பெரும் உதவியாய் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.