இன்றைய காலகட்டத்தில் தானியங்கி கார்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் தானியங்கி உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் உணவுகளை சமைப்பது முதல் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது வரை எல்லா வேலைகளையும் ரோபோக்களே செய்வது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்த தானியங்கி உணவகத்தில் எல்லா வேலைகளுமே செய்வது இயந்திரங்கள் தான். வேலைக்கு இங்கு ஒரு பணியாள் கூட இல்லை. கலிபோர்னியா மாகாணம் பசடேனா பகுதியில் தொடங்கப்பட்டுள்ள ‘கலி எக்ஸ்பிரஸ்’ என்ற உணவகம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. உலகிலேயே முதல் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ள உணவகம் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது.
மொத்தம் மூன்று நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த உணவகத்தில் உள்ள இயந்திரங்கள் மூலமாக, அனைத்துமே மனிதர்களின் பங்களிப்பின்றி தானாக நடத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இதில் உள்ள இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவுகளை தயாரித்துக் கொடுக்கின்றன. பணப்பரிமாற்றத்திற்கு பாப் ஐடி என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வாடிக்கையாளர் எப்படி விரும்புகிறார்களோ அதே போன்ற உணவுகளை இயந்திரங்கள் தயார் செய்து கொடுக்கின்றன. குறிப்பாக இந்த ரோபோக்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளையும், கிரில் செய்யும் உணவுகளையும் தயார் செய்வதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.
எல்லா வேலைகளையும் இயந்திரங்களே செய்வதை பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளதால், மக்கள் மத்தியில் இந்த கலி எக்ஸ்பிரஸ் உணவகம் தற்போது கவனம் பெற்று பிரபலமடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற உணவகங்கள் உலகெங்கிலும் நிறுவப்படலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.
இதுவரை மனிதர்களின் பங்களிப்பு மூலமாகவே செய்ய முடியும் என இருந்த உணவுத்துறையை, முழுக்க முழுக்க ரோபோக்கள் ஆக்கிரமித்திருப்பது நம்மை வியப்படையவும் வைக்கிறது அதே நேரம் மறுபுறம் பயத்தையும் ஏற்படுத்துகிறது.