உலகில் முதன்முதலில் அணுஉலையினை அமைத்துக் காட்டியவர் அமெரிக்காவைச் சேர்ந்த சர் என்ரிகோ ஃபெர்மி. கி.பி.1942 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சிகாகோ பல்கலைகழக கால்பந்தாட்ட மைதானத்தில் ஒரு சிறிய சோதனை அணுஉலையை அமைத்தார். என்ரிகோ பெர்மி உருவாக்கியது செயற்கை அணுஉலை (Manmade Reactor). ஆனால் இந்த பூமியில் இயற்கை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அணுஉலையினை வடிவமைத்து (Natural Reactor) இயக்கியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் போன்றவை கனமான அணுக்களாகும். இத்தகைய அணுக்களை நியூட்ரான்களைக் கொண்டு தாக்கும்போது அவை சிறு அணுக்களாக பிளவுபடுகின்றன. இத்தகைய நிகழ்ச்சியானது அணுப்பிளவு (Nuclar Fission) என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலின் விளைவாக வெப்ப ஆற்றல் தோன்றும். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி நீராவியினை உற்பத்தி செய்து டர்பைனை சுழலச் செய்வார்கள். டர்பைன் சுழலும் போது மிகப்பெரிய ஜெனரேட்டரானது இயங்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறையில்தான் அணுமின் நிலையங்களில் அணுவை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் கேபன் [Gabon] என்ற இடத்திற்கு அருகில் ஆக்லோ [Oklo] எனும் பகுதியில் யுரேனியச் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அணு விஞ்ஞானிகள் 1972 ஆம் ஆண்டில் இந்த இடத்தை ஆராய்ந்த போது ஒரு அதிசயத்தைக் கண்டுபிடித்தார்கள். அணுஉலைக்குள் யுரேனியமானது எரிக்கப்பட்ட பின்னர் எந்நிலையில் இருக்குமோ அந்த நிலையை அங்கே கண்டார்கள். அணுஉலைக்குள் தொடர்வினை நிகழ்ந்ததைப் போன்ற பல அடையாளங்கள் அந்த பகுதியில் காணப்பட்டன. காஸ்மிக் கதிர்களிலிருந்து நியூட்ரான்கள் வெளிப்பட்டு அது ஆக்லோவில் இருந்த யுரேனிய படிமத்தைத் தாக்கி தொடர்வினை நிகழ காரணமாய் அமைந்தது என்ற அறிவியல் உண்மையினையும் அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதன் மூலம் வெளிப்பட்ட வெப்ப ஆற்றலானது அந்த பகுதியில் இருந்த நிலத்தடி நீரை கொதிக்கச் செய்து தொடர்வினை முற்று பெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சி சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் நிகழ்ந்திருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள். ஆக்லோவில் மூன்று இடங்களில் இதுபோன்ற இயற்கை அணுஉலை அமைந்திருப்பதையும் கண்டுபிடித்தார்கள்.
மனிதர்கள் வடிவமைக்கும் அணுஉலையில் அறிவியல் ரீதியாக என்னென்ன விஷயங்கள் நிகழுமோ அவை அனைத்தும் இந்த ஆக்லோவில் இயற்கையாகவே நடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். ஒரு செயற்கை அணுஉலைக்குள் யுரேனியம் எரிக்கப்படும்போது தோன்றும் கழிவுகளைப் போலவே இயற்கையான இந்த அணுஉலைப்பகுதியில் உருவாகியிருந்ததையும் கண்டுபிடித்தார்கள். மேலும் ஆக்லோ இயற்கை அணுஉலையில் எரிக்கப்பட்ட கதிரியக்கப் பொருட்கள் சுற்றுப்புறத்தை பாதிக்காத வண்ணம் அப்பகுதியிலேயே இருந்ததையும் கண்டுபிடித்தார்கள்.
நியூட்ரான்களைக் கொண்டு யுரேனியம் அணுக்களைத் தாக்கினால் அவை பிளவுபடும். இவ்வாறு பிளவுபடும் போது தொடர்ந்து வெப்பமும் நியூட்ரான்களும் வெளியாகின்றன. இத்தகைய வினையானது தொடர்ந்து நடைபெற்று வெப்ப ஆற்றலானது கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியானது “தொடர்வினை” (Chain Reaction) என்று அழைக்கப்படுகிறது.
ஆக்லோ இயற்கை அணுஉலைப் பகுதியை 2004 ஆம் ஆண்டில் ஆய்வு செய்த வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சில அரிய உண்மைகளைக் கண்டுபிடித்தனர். இந்த இயற்கை அணுஉலையில் ஒரு நாளைக்கு எட்டுமுறை தொடர்வினை நடைபெற்றதாகவும் தொடர்ந்து சுமார் முப்பது நிமிடங்கள் இயங்கி பின்னர் இரண்டரை மணிநேரம் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.